xபிஷப் கைது: மருத்துவ பரிசோதனைக்கு நடவடிக்கை!

public

கேரள கன்னியாஸ்திரீயின் பாலியல் புகார் விவகாரத்தில் மூன்று நாட்களாக விசாரணை நடந்ததையடுத்து நேற்று (செப்டம்பர் 21) பிஷப் பிராங்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப்பிலுள்ள ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரீ ஒருவர். இது தொடர்பாக, கடந்த ஜூன் 28ஆம் தேதியன்று போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று ஜலந்தர் சென்ற கேரள போலீசார், பேராயர் பிராங்கோ முலக்கல்லிடம் விசாரணை நடத்தினர். ஆனால், இந்த வழக்கில் பேராயர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, கொச்சியில் கடந்த வாரம் கன்னியாஸ்திரீகள் போராட்டம் நடத்தினர். மேலும், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.

இதற்கிடையில், பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீ இந்த விவகாரம் குறித்து, டெல்லியிலுள்ள வாடிகன் தூதரகத்துக்குக் கடிதம் எழுதினார். அதில், 2014 முதல் 2016ஆம் ஆண்டு வரை, பேராயர் முலக்கல் 13 முறை இயற்கைக்கு மாறான முறையில் தன்னைப் பாலியல் வல்லுறவு செய்ததாகக் கூறியிருந்தார். தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அவர் விசாரணையை முடக்க முயல்வதாகவும், பல கோடி ரூபாய் வரை பணம் தர முயன்றதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரீயின் அடையாளம் எதிர்த் தரப்பினரால் வெளிப்படுத்தப்பட்டது சர்ச்சைக்குள்ளானது.

இந்த நிலையில், குற்றச்சாட்டுக்கு ஆளான பிஷப் பிராங்கோ முலக்கல் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அவர் அங்கம் வகிக்கும் மிஷனரிஸ் ஆஃப் ஜீசஸ் சபை செப்டம்பர் 14ஆம் தேதி தெரிவித்தது. தம் மீது வீண் பழி போடப்படுவதாக பேராயர் பிராங்கோ கூறிவருகிறார். இந்த விவகாரம் கேரளாவில் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பிஷப் தற்காலிக நீக்கம்

இந்நிலையில் தன்னை ஜலந்தர் பிஷப் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்க வலியுறுத்தி வாடிகன் நிர்வாகத்திற்கு பிராங்கோ செப்டம்பர் 16ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில் இந்த வழக்கு தொடர்பாகக் கேரளாவில் நீண்ட காலம் தங்க வேண்டியிருப்பதால், தம்மை பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருந்தார். பேராயர் பிராங்கோவின் கோரிக்கையை ஏற்று வாடிகன் சபை நேற்று (செப் 20) அவரை தற்காலிக நீக்கம் செய்தது.

இதற்கிடையில், செப்டம்பர் 18 ஆம் தேதி, கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார் பிஷப் பிராங்கோ. அந்த மனுவானது வரும் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிஷப் கைது

இந்நிலையில், கேரள சிறப்பு விசாரணைக் குழுவினர்களான கோட்டயம் எஸ்.பி.ஹரிசங்கர், வைக்கம் டி.எஸ்.பி சுபாஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வைக்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். செப்டம்பர் 19ஆம் தேதி பகல் 11 மணிக்குத் தொடங்கிய விசாரணை மாலை 6 மணிக்கு முடிந்தது. மேலும் 20, 21ஆகிய தேதிகளிலும் விசாரணை தொடர்ந்தது. இதற்கிடையில், நேற்று முன்தினம் (செப்,19) இரவு 9.30 மணியளவில் புகார் அளித்த கன்னியாஸ்திரீயிடமும் போலீஸார் விசாரணை நடத்தினர்.

மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில், அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரங்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, பிஷப் பிராங்கோவை கோட்டயம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். கைது குறித்த தகவலை ஜலந்தர் காவல்துறைக்கு கேரள போலீசார் தெரிவித்தனர். மேலும், கன்னியாஸ்திரீ மற்றும் பிஷப்பை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி, மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி விசாரணைக்கு எடுக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்தியாவில் பாலியல் வழக்கில் கைது செய்யப்படும் முதல் கத்தோலிக்க பாதிரியார் பிஷப் பிராங்கோ என்பது குறிப்பிடத்தக்கது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *