xபிரிவினை பேசுவது உதவாது: விஷாலை சாடிய ராதிகா

Published On:

| By Balaji

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் ஜூன் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணி மீண்டும் போட்டியிடுகிறது. இவர்களை எதிர்த்து பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிடுகிறது. நடிகர் விஷால் பாண்டவர் அணி சார்பாக பிரச்சார வீடியோ ஒன்றை தனது அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனலில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோவில் சரத்குமார், ராதாரவி தலைமை பற்றி சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடிகர் விஷாலை கடுமையாக சாடி நடிகை ராதிகா சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜூன் 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ள தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தேர்தலை முன்னிட்டு பாண்டவர் அணியினர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். சரத்குமார் சங்கத் தலைவராக இருந்தபோது எதையும் செய்யவில்லை எனவும், சங்கத்தில் முறைகேடாக செயல்பட்டார்கள் எனவும், மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கூறிய பழைய பல்லவியை வெட்கமே இல்லாமல் மீண்டும் வெளியிட்டுள்ளது பிச்சைக்காரன் வாந்தி எடுத்தமாதிரி வேடிக்கையாக இருக்கிறது.

விஷால் ரெட்டி அவர்களே, நீங்கள் சொன்ன குற்றச்சாட்டுகளை இதுவரை நிரூபித்திருக்கிறீர்களா? நீங்கள் கொடுத்த புகார்கள் விசாரணையில் இருக்கும்போது முன்பு சொன்ன பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் உண்மையாகிவிடுமா? உங்கள் முதுகில் ஆயிரம் அழுக்கு மூட்டைகள் இருக்கும்போது சரத்குமார் பற்றி பேச உங்களுக்கு கூச்சமாக இல்லையா? படத்தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பணத்தை எல்லாம் காலி செய்துவிட்டு நீதிமன்ற வாசலில் நிற்கிறீர்களே. நீங்கள் நீதிமான் மாதிரி வீடியோவை வெளியிட கொஞ்சமாவது அருகதை உண்டா? இன்றைய தலைவர் நாசர் எதைக் கேட்டாலும் *அப்படியா இது எனக்குத் தெரியாமல் நடந்துவிட்டது* என்று வழக்கம்போல ஓடி ஒளிந்துகொள்வார்.

இப்படியே நீங்கள் பிரிவினை பேசி செயல்பட்டு வருவது நடிகர் சங்கத்தை ஒற்றுமைப்படுத்தவோ, நலிந்த கலைஞர்களுக்கு நல்லது செய்யவோ ஒருபோதும் உதவாது. இனியாவது அடக்கத்தோடு செயல்பட முயலுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதற்கு முன், விஷாலின் பிரச்சார வீடியோவை கடுமையாக சாடி நடிகையும், சரத்குமாரின் மகளுமான வரலட்சுமி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதுபற்றி நமது மின்னம்பலத்தில் ஏற்கெனவே [செய்தி](https://minnambalam.com/k/2019/06/14/40) வெளியிட்டிருந்தோம்.

வரலட்சுமிக்கு பதில் அளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “உண்மைகளை வெளிப்படுத்தவே வீடியோ வெளியிட்டோம். தவறு நடந்திருந்தால் சங்கம் மூலமாகவோ, சட்டரீதியாகவோ தண்டனை பெற்றுத்தருவோம் என தெரிவித்திருந்தோம். ஒவ்வொருவரின் நம்பிக்கையும் ஓட்டு போடும்போது தெரியவரும். வரலட்சுமி போன்ற எல்லா நண்பர்களுக்கும் கோபம் வரும். யார் எது வேண்டுமென்றாலும் பேச அதிகாரம் இருக்கிறது. அதை சட்டமே சொல்கிறது. தனிப்பட்ட முறையில் நானும் நண்பர்கள் மீது கோபப்படலாம். அனைவருக்கும் கருத்து சுதந்திரம் உண்டு” என்று தெரிவித்தார்.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**

**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share