2016ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்தை மீறி நிதியைப் பயன்படுத்தியதாக டொனால்ட் ட்ரம்பின் முன்னாள் வழக்கறிஞர் ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிடம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றியவர் மைக்கேல் கோவன். கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பிரச்சாரம் தொடர்பான செலவுகளை இவர் கவனித்து வந்தார். அப்போது, ட்ரம்ப் உடனான உறவைப் பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று போர்னோ வகைத் திரைப்படங்களில் நடிக்கும் ஸ்டார்மி டேனியல்ஸ் என்பவருக்கு மைக்கேல் கோவன் 1,30,000 டாலர் தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
சம்பந்தப்பட்ட நடிகையே இந்த குற்றச்சாட்டை தெரிவித்தார். இதுபோல், வரி ஏய்ப்பு, பண மோசடி போன்ற முறைகேடு வழக்குகள் கோவன் மீது தொடரப்பட்டது. நியூயார்க்கில் உள்ள மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நேற்று(ஆகஸ்ட் 21) விசாரணைக்கு வந்தது. அப்போது தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட கோகன், ‘வேட்பாளர்’ கேட்டுக்கொண்டதால் தேர்தல் முடிவுகளில் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அந்த நிதியைப் பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். வரி மற்றும் வங்கி பண மோசடி உள்பட 8 அம்சங்களில் நடந்த முறைகேடுகளை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதேபோல் ட்ரம்பின் பிரச்சார குழு தலைவராக இருந்த பால் மனாபோர்ட், உதவியாளர் ரிக் கேட்ஸ் ஆகியோர் உக்ரைனைச் சேர்ந்த அரசியல்வாதி விக்டர் யானுகோவிச், அவரது ரஷ்ய ஆதரவு அரசியல் கட்சியிடமிருந்து பல மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது.
விர்ஜீனியா மாகாணத்தின் அலெக்ஸாண்ட்ரா நீதிமன்றத்தில் நடந்து வந்த பால் மனாபோர்ட் மீதான வங்கி, வரி மோசடி வழக்குகள் மீதான விசாரணை முடிந்ததை அடுத்து, 8 வழக்குகளில் அவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.�,