பாகிஸ்தான் தின ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய ராணுவ உயர் அதிகாரி சஞ்சய் விஷ்வாஸ் ராவ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்றனர்.
பாகிஸ்தான், 1956ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி, உலகின் முதல் இஸ்லாமிய குடியரசு ஆனது. இதைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் அந்த நாளில், ‘பாகிஸ்தான் தினம்’ என்ற பெயரில் ராணுவ அணிவகுப்பு நடத்துவது வழக்கம். ஆனால், இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்தியத் தூதரக அதிகாரிகள் பங்கேற்பது இல்லை.
இந்தியா – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் எப்போதும் இரு தரப்பினர்களிடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. இதனால் இரு தரப்பினர்களிடத்தும் உயிர்ச்சேதங்கள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் இரு நாடுகள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையிலும், நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சிக்கு, அங்குள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றும் ராணுவ அதிகாரிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பாகிஸ்தான் ராணுவம் அழைப்பு விடுத்திருக்கிறது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவத் பஜ்வா, இந்தியாவுக்குச் சமாதான செய்தி விடுக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாகப் பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
“பாகிஸ்தான் தின ராணுவ அணிவகுப்பைப் பார்வையிட, இந்திய ராணுவ பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்ததின் காரணம் பாகிஸ்தான் அமைதியைத்தான் விரும்புகிறது என்ற தகவலைத் தெரிவிக்கத்தான்” என்று அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் தின ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் இந்திய ராணுவ உயர் அதிகாரி சஞ்சய் விஷ்வாஸ் ராவ் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் பங்கேற்றுப் பார்வையிட்டனர்.
ஜம்மு காஷ்மீரில் எல்லைப் பகுதியில் இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல்கள் நடைபெற்றுவருகிற நிலையில், பாகிஸ்தான் தின ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில், இந்திய உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்து, அவர்கள் பங்கேற்றது என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.
பாகிஸ்தானில் இருந்து வெளிவருகிற ‘தி எக்ஸ்பிரஸ் டிரிபியுன்’ என்ற பத்திரிகை இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
�,