– பா.நரேஷ்
நாம் காட்டுத்தீ நிகழ்வுகளை செய்திகளாக பார்க்கிறோம். காட்டுத்தீ பரவல் செய்தி அல்ல! அதற்கு பின்னால் இருக்கும் காரணிகள்தான் மனிதகுல எதிர்காலத்திற்கான செய்தி. அதைப் புரிந்துகொள்ள சிறிய ஒப்புமைகளுடன் இந்நிகழ்வுகளை அணுகலாம்.
குறிப்பிட்ட ஓர் இடத்திலோ, சில இடங்களிலோ காற்றில் ஈரப்பதமின்மையால் காடுகள் பற்றி எரிந்தால், அவற்றைக் காட்டுத்தீ நிகழ்வுகள் என்று வகைப்படுத்தலாம். வெவ்வேறு காலநிலைகளைக் கொண்டிருக்கும் நிலப்பரப்புகளில் கால இடைவெளியே இல்லாமல் காய்ந்த காடுகள் கட்டுப்பாடின்றி பற்றி எரிந்து பரவுகிறதென்றால், அது காட்டின் இயல்பால் நிகழ்ந்த விபத்துகள் அல்ல. இயற்கை தன் இயல்பை மீறியதால் ஏற்பட்ட நோய்ப்பரவல். கடந்த ஆறு மாதங்களுக்குள் மட்டும் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, கலிஃபோர்னியா, பிரேசில், தாய்லாந்து மற்றும் இந்தியாவில்கூட இந்த நோய் பரவியிருக்கிறது.
ஒரு நோய்க்கிருமி பரவுவதைப்போன்றதும், வெட்டுக்கிளிகள் வயல்வெளிகளில் படையெடுத்து மொத்த நிலங்களையும் மொட்டையாக்குவதைப் போன்றதுமானது இந்நிகழ்வுகள். நோய்க் கிருமிகளும் வெட்டுக்கிளிகளும்கூட இயற்கையின் இயல்பான பிரழ்நிகழ்வுகளாக கணக்கில்கொள்ளலாம். ஆனால் இந்த காட்டுத்தீ நிகழ்வுகளை, திட்டமிடப்பட்ட தவறுகளின் விளைவுகளாவே கருதவேண்டும்.
மனிதர்களின் முழு சுயநினைவுடன் நடந்த இரண்டு உலகப்போர்களிலும் ஆயுதப்பயன்பாடுகளால் புவியின் 30 சதவிகித உயிரினங்கள் பாதிக்கப்பட்டன என்றால், மனிதர்கள் சுயநினைவில்லாமல் நடத்தும் இந்த மூன்றாம் உலகப் போரில் பருவநிலைமாற்றத்தால் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட உயிரினங்கள் ஏற்கனவே அழிந்துவிட்டன. அதை நாம் உணரவில்லை என்பதால், அப்படி ஒரு பேரழிவு நடக்கவில்லை என்று அர்த்தமாகாது. உலகில் மனிதர்கள் அல்லாத பிற உயிரினங்களில் 60 சதவிகிதம் காணாமல் போயிருக்கின்றன என்கிறது வோர்ல்ட் வைட் ஃபண்ட் ஃபார் நேச்சர்(WWF) என்ற அமைப்பு. அதன் அறிவியல் மற்றும் பாதுகாப்புத்துறையின் நிர்வாக இயக்குநர் மைக் பேர்ரெட்(Mike barret) கூறுகையில், “மனித இனத்தில் 60 சதவிகிதம் அழிந்திருக்கிறதென்றால், அது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்ரிக்கா, யூரோப், சீனா மற்றும் ஓசானியா ஆகிய நாடுகள் மனிதர்களே இல்லாமல் துடைத்தழிக்கப்பட்டதற்கு சமம்.” என்கிறார்.
இன்று இந்த காட்டுத்தீ பரவல்களுடன் அழிந்துவரும் உயிரினங்களின் எண்ணிக்கைகளும் சதவிகிதமும் உயர்ந்துவருகிறது. இவை இத்தோடு முடியப்போவதுமில்லை. காட்டுத்தீ நிகழ்வுகள் வரும் காலங்களில் இன்னும் அதிகமாகவிருக்கின்றன. வலதுசாரி சித்தாந்தம், இந்த விபத்துகளை பற்ற வைக்கும் அல்லது பற்றிய இடங்களில் எண்ணை ஊற்றும். மனிதர்கள் எனும் கிருமிகளால் பூமிக்கு விளைந்த இந்நோய் தீவிரமாகும்போது, இயற்கையின் எதிர்பாற்றல் வினையாற்றி நோய்க்கிருமிகளை அழிக்கும் அல்லது அழிந்துபோகும்.
அந்நோய்க்கு இப்போது பருவநிலை மாற்றம் என்று பெயர். பற்றியெரிவது காடுகள் அல்ல, பருவநிலை மாற்றம்தான் என்பதை புரிந்துகொண்டு செயலாற்றினால், நாம் குறைந்தபட்சம் இப்போரை புரிந்துகொண்டோம் என்று பொருள்.
இவ்வாறான கடினமான சூழல்களை அதிரடி நடவடிக்கைகள் மூலம் சரிசெய்வது முழுமையான தீர்வாகாது. பருவநிலை மாற்றம் குறித்த புரிதலும், அரசு அரசாங்கம் ஆகியவற்றைக் கடந்து பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள குடிமக்கள் மேற்கொள்ளும் தற்சார்பான சீறிய மாற்றுப்பாதை நடவடிக்கைகளுமே நீடித்த பூவுலகுக்கான தீர்வாக அமையும்.
இந்த கண்ணோட்டத்தில் ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிகழ்வுகளை அணுகுவதே, இனி நடக்கவிருக்கும் பேரிடர்களை கையாளும் பக்குவத்தை மனதளவில் ஏற்படுத்தும்.
ஆஸ்திரேலியா – இன்றைய நிலையும் நெகிழ்ச்சியும்!
தற்போதைய ஆஸ்திரேலிய காட்டுத்தீ நிகழ்வுகள் திடீரென பற்றிய தீ என்பதே பெரும்பான்மையானவர்களின் பார்வையாக இருக்கிறது. 2019ன் நவம்பர் மாதம், ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் தலைமை அமைச்சர் கிளாடிஸ் பெரெஜிக்லியன் (Gladys Berejiklian) தன் நாட்டு மக்களிடம், “நீங்கள் உயிரோடு இருக்க வேண்டுமானால், நியூ சௌத் வேல்ஸை விட்டு வெளியேறி விடுங்கள் என்று எச்சரித்துள்ளார். அப்போதே பற்றிய நெருப்பை அணைக்க ஆஸ்திரேலிய பிரதமர் என்ன செய்தார் தெரியுமா? ஹவாய் தீவுக்கு சென்று விடுமுறை களித்துக்கொண்டிருந்தார். வலதுசாரி சித்தாந்தம் இந்நெருப்பிற்கு எண்ணை ஊற்றவில்லையென்றாலும், அணையாமல் பார்த்துக்கொண்டது அம்பலம். அதன்பிறகு இன்றுவரையிலான செய்திகளை நாம் அன்றாடம் கண்டுகொண்டிருக்கிறோம்.
தற்போது காட்டுத்தீயிலிருந்து கடந்து வந்துகொண்டிருக்கிறது ஆஸ்திரேலியா. கடந்து வரும் பாதைகளில் மழையுடன் சேர்த்து அதீத மனிதமும் பொழிவதை காணமுடிகிறது. கடந்த சில மாதங்களாக காட்டுத்தீயினால் பெரும் பாதிப்புக்கு உள்ளான ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடலோரப் பகுதியில் உள்ள சிட்னியில் இருந்து மெல்பர்ன் வரை மிதமான மழையும், நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தின் சில பகுதிகளில் கன மழையும் பெய்துள்ளது.
எனினும் இவ்வார இறுதியில் மீண்டும் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கூடவே, விக்டோரியா மற்றும் நியூ சௌத் வேல்ஸ் மாகாணங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ ஒன்றாக சேர்ந்து பெருந்தீயாக உருவாகலாம் என்றும் எச்சரிக்கின்றனர்.
இவ்வாறான சூழ்நிலைகளில், பேரிடர் குறித்த நடுங்கத்தக்க செய்திகளை நாம் நாள்தோறும் காணுகிறோம். 5 கோடி விலங்குகள் உயிரிழந்த ‘தகவலும்’, நூற்றுக்கணக்கான மக்கள் காயமடைந்த ‘செய்தி’களும் நம்மை நிலைகுலையச்செய்யும். அவற்றுடன், சாமானிய மக்கள் சிலர் இப்பேரிடரை எதிர்கொள்ளும் விதத்தையும் தெரிந்துகொள்வது வரும் காலங்களில் ஏற்படவிருக்கும் பருவநிலை பேரிடர்களை எதிர்கொள்ள உதவியாக இருக்கும்.
1)காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட விலங்குகளை சாமானிய மக்கள் சிலர் தங்கள் வீடுகளுக்கு எடுத்துச்சென்று பிள்ளைகள்போல் பராமரித்து வருகின்றனர். அவற்றிற்கு உணவு தங்குமிடம் அளித்து முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
2) ஆஸ்திரேலியாவில் கிழக்கு கிப்ஸ்லேண்ட் பகுதியில் குடிபெயர்ந்திருக்கும் மக்களுக்கு, தங்களின் இந்திய உணவகத்தில் இருந்து இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர் கன்வால்ஜித் தம்பதி. இவர்களுக்கு, மெல்போர்னைச் சேர்ந்த சீக்கிய தன்னார்வலர்கள் உதவுகின்றனர். கன்வால்ஜித் சிங் மற்றும் அவரின் மனைவி கமல்ஜித் கவுர், ஆஸ்திரேலியாவிலுள்ள பைர்ன்ஸ்டேல் நகரில் இந்திய உணவகம் நடத்திவருகிறார்கள். மேலும், ஒரு நாளைக்கு 1,000 பேருக்குச் சமைக்க முடியும் என்றும் போதுமான அரிசி, மாவு மற்றும் பயறு வகைகளைச் சேமித்து வைத்திருக்கிறோம் என்றும் உணவகத் தரப்பு கூறியுள்ளது. அவை அடுத்த வாரம் அல்லது அதற்கு மேல் வரும் நாள்களுக்கும் நீடித்து உதவும் என்று இவர்கள் நம்புகின்றனர்.
3) மனிதர்கள் மட்டுமல்லாமல், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நாய்களும் அதிகமான காட்டுயிர்களைக் காப்பாற்றி வருகின்றன. நெருப்பென்றும் பாராமல் பாய்ந்துசென்று உதவும் மீட்பு நாய்கள், மனிதத்தையும் மிஞ்சிவிடுகின்றன.
4) மீட்புப் படையினரைத் தாண்டி, குடிமக்கள் சிலரும் தங்களால் முடிந்தவரை காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட விலங்குகளை மீட்டு வருகின்றனர். பற்றியெறியும் நெருப்புகளினூடே வெறும் வெள்ளை மேலாடைகளை அணிந்துகொண்டு விலங்குகளை மீட்கும் நடுத்தர வயது பெண்மணியின் ’மனதை நெகிழச்செய்யும்’ காணொளியை காண முகநூலில் நான்கு முறை ஸ்க்ரால் செய்தால் போதும்.
5) ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் தீயணைப்பு சேவைகளுக்கான நிதி திரட்டலில், வெறும் 48 மணி நேரத்தில் 143 கோடிக்கும் அதிகமான தொகை நிதியாக வழங்கப்பட்டுள்ளது.
பேரிடர்களில் பேருதவியாக மனிதம் மீண்டும் துளிர்த்திருப்பது, தற்போதைய சூழ்நிலையில் பெரும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
பின் குறிப்பு : இவ்வாறான நம்பிக்கை அளிக்கும் செய்திகளை அதிகம் நாம் தேடிப்படித்துத் தயாராக வேண்டும். அடுத்து வரும் நாட்களில் அச்செய்திகளில் நம் காடுகளும் நாடுகளும் இடம்பெறுவதற்கு பருவநிலை மாற்றம் அதீத வாய்ப்புகளை வழங்கியிருக்கிறது!�,”