தேடப்படும் குற்றவாளியான நீரவ் மோடி இங்கிலாந்தில் பதுங்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கையில் இந்திய அரசு இறங்கியுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்சியுடன் இணைந்து போலியான ஆவணங்களைக் கொண்டு ரூ.13,700 கோடிக்கு மேல் மோசடி செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பியோடிவிட்டார். அவர் இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ளதாகச் சந்தேகிக்கப்பட்டது. விஜய் மல்லையா, நீரவ் மோடி என, இந்தியாவில் மோசடி செய்துவிட்டுத் தப்பிச் செல்லும் மோசடியாளர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் கூடாரமாக இங்கிலாந்து மாறிவிட்டதாகப் பல்வேறு கருத்துகளும் எழுந்தன. இதுபோன்ற சூழலில் நீரவ் மோடி இங்கிலாந்தில் தங்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெயரை வெளியிட விரும்பாத சிபிஐ அதிகாரி ஒருவர் *ஃபர்ஸ்ட் போஸ்ட்* ஊடகத்திடம் பேசுகையில், “நீரவ் மோடி இங்கிலாந்தில் தங்கியுள்ளதை இங்கிலாந்து அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர். இதுதொடர்பாக இண்டர்போல் அமைப்புக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு உள்துறை அமைச்சகத்துக்கும் கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அடுத்தகட்ட நடவடிக்கைக்கான கோரிக்கை முன்வைக்கப்படும்” என்றார்.
முன்னதாக ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் இந்திய அரசு தரப்பிலிருந்து நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கான கோரிக்கை இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டதாக வெளியுறவுத் துறை இணையமைச்சரான வி.கே.சிங் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார். அதேபோல, நீரவ் மோடிக்கு எதிராகச் சிவப்பு கார்னர் அறிக்கையை இண்டர்போல் அமைப்பு வெளியிட்டிருந்தது.�,