புதுக்கோட்டையில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில் ஹெல்மெட் அணியாமல் சென்று நீதிமன்ற உத்தரவை மீறியதாக, தமிழக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி.
மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இரு சக்கர வாகனங்களில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இந்த உத்தரவை தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் மீறியதாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் கடந்த 10ஆம் தேதியன்று நடந்த மருத்துவ முகாமை ஒட்டி நூறு பேருடன் இரு சக்கர வாகனப் பேரணி நடத்தினார் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இந்தப் பேரணியில் அமைச்சரும், பேரணியில் கலந்துகொண்டவர்களும் ஹெல்மெட் அணியவில்லை. இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாய ஹெல்மெட் அணிய வேண்டும் என்றும், காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணியவேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. தமிழக அரசும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவித்திருக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற அமைச்சர் விஜயபாஸ்கர் மீதும், மற்றவர்கள் மீதும் இலுப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்திருக்க வேண்டும். இது குறித்து உள் துறைச் செயலாளர், டிஜிபி, இலுப்பூர் காவல் ஆய்வாளருக்குக் கடந்த 13ஆம் தேதியன்று புகார் அனுப்பியும் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
அதேபோல, கடந்த 8ஆம் தேதியன்று மதுரையில் சர்கார் படம் வெளியான தியேட்டர் முன்பு அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பாவும், அவரது கட்சியினரும் சேர்ந்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக புகார் அளித்தும் அண்ணாநகர் காவல் ஆய்வாளர் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இன்று (நவம்பர் 22), இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
�,”