தமிழகத்தில் ஏற்கனவே 100 நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 4) மீதமுள்ள 312 நீட் தேர்வு மையங்கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, ‘ஸ்பீட்’ என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து 20 கோடி ரூபாய் செலவில் நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்கத் தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக 100 நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறையின், http://tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் 2017 அக்டோபர் 31ஆம் தேதி வரை பதிவு செய்தனர்.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய நூலகர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கேஏ செங்கோட்டையன், “பள்ளி மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காக 12 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் செயல்படுத்தப்படும். நீட் தேர்விலிருந்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கமாகும். நீட் தேர்வு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. நீட் பயிற்சிக்காக முதற்கட்டமாக 100 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை மீதமுள்ள 312 மையங்களும் தொடங்கப்படும். எனவே தமிழகத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் நாளை முதல் 412 பயிற்சி மையங்களும் செயல்படும்” எனத் தெரிவித்துள்ளார்.�,