மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் முருகன் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் நிர்மலாதேவி, சில மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த ஆடியோ வெளியானதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் கைதானார்.
நிர்மலாதேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட நீதிமன்றங்களில் இவர்கள் மூன்று பேரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால், இதுவரை மூன்று பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை. இவர்கள் மூன்று பேரும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பேராசிரியை நிர்மலா தேவி மற்றும் முருகன் ஆகியோர் ஜாமீன்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் அமர்வு முன்பு இன்று (ஆகஸ்ட் 23) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.�,