மரிய பனி மோனிஷா. ப
திருநெல்வேலியில் பரவலாகக் காணப்படும் தொழில், பீடி சுற்றுதல். பல பெண்களின் கைத்தொழிலான இது, இன்று பலவிதங்களிலும் அபாயத்தை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இதில் பணிபுரியும் தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
எல்லாத் தொழிலாளர்களைப் போலவே இவர்களும் சுரண்டலுக்கு ஆளாகிக்கொண்டிருக்கிறார்கள் என்றாலும், கொஞ்சம் வித்தியாசமான முறையில் என்றே சொல்லலாம். பொதுவாக, ஒரு தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தப்படுபவர், அங்கு தனது உடல் உழைப்பை மட்டுமே கொடுக்கிறார். ஆனால், பீடி சுற்றுதல் வெறுமனே உழைப்பை மட்டும் வாங்கிக்கொள்வதில்லை. வேறு என்ன என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு அந்தத் தொழில் குறித்துத் தெரிந்துகொள்வது அவசியம்.
**உத்தரவாதமற்ற வேலை**
பீடி சுற்றுதல் ஒரு பெருநிறுவனம் அல்லது சிறு நிறுவனம் (ஏஜென்ட் (அ) கமிஷன்) மூலமாக மக்களிடம் இணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறது. இதன் பிறகு, அவர்களுக்கு பீடி நோட்டு என்ற பாஸ்புக் கொடுக்கப்படுகிறது. பெருநிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு இந்தப் பதிவு செய்யப்பட்ட புத்தகம் கொடுக்கப்படுகிறது. இதனால் அவர்களுக்கு பி.எஃப், குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, மருத்துவ வசதி ஆகியவை கிடைக்கின்றன. கமிஷன் கடைகளில் சுற்றும் நபர்களுக்கு இவற்றில் எதுவும் கிடைப்பதில்லை. ஒப்பந்த ஊழியர்களைப் போன்ற உத்தரவாதமற்ற வேலை வாய்ப்பு இது.
இலை, தூள் ஆகியவை மட்டுமே நிறுவனத்தால் வழங்கப்படும். 200 கிராம் தூளுக்கு, 1 கிலோ இலை வீதம் 1,000 பீடிகளை ஊழியர் சுற்றிக் கொடுக்க வேண்டும். இதுதான் அவர்களின் தினசரி டாஸ்க். பெருநிறுவனத்தில் 500 பீடிக்கு ரூ.125 (இதில், பி.எஃப் இதர பிடித்தங்கள் போக ரூ.93 கைக்குக் கிடைக்கும்). மேலும், சிறு நிறுவன கடைகளில் ரூ.100 ( எந்த பிடித்தமும் கிடையாது). கூடுதலாக, கமிஷன் கடைகளில் 500 பீடிக்கு 50 அல்லது அதற்கு மேற்பட்ட பீடிகளை கமிஷனாக அதாவது, போர்டு வண்டல் என்ற பெயரில் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொழிலில் அதிகபட்சமாக ஈடுபட்டிருப்பது பெண்களே. அடிமட்டத்தில் உழைப்பவர்கள் பெண்கள்; நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் ஆண்கள். ஆரம்ப காலத்தில் பெண்கள் கல்வியறிவு கிடைக்கப் பெறாததால் பெண்கள் கூலித் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார்கள். அதன் தொடர்ச்சியாகவே இப்போதும் இத்தகைய நிலை இங்கே உள்ளது.
சிவகாசி போன்ற மாவட்டங்களில் இருக்கும் தொழிற்சாலை சார்ந்த அமைப்பு, பீடி நிறுவனங்களுக்கு இல்லை. உரிமைகளுக்காகப் போராடும் தனிச்சையான செயல்முறைகளும் இங்கில்லை. எல்லாத் தொழிலாளர்களுக்கும் அரசின் சார்பில் இருப்பது போல நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளபோதும் அது குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை.
கிராமப்புறங்களில் இத்தொழில் பரவலாகக் காணப்படுகிறது. 8 மணி நேரத்துக்கும் அதிகமாக உழைக்கும் பெண்களை அதிகம் கொண்டிருக்கும் இந்த பீடி நிறுவனங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட வருடங்களுக்குச் சுற்றிய பிறகே ஒய்வூதியம் வழங்குவதற்கான சர்வீஸ் அட்டை வழங்கப்படும்.
பீடி சுற்றுவதில் புது வகையான கிராக்கி ஒன்றும் காணப்படுகிறது. ஐந்து அல்லது அதற்கும் அதிகமாக நோட்டுகளில் பீடி சுற்றிய பெண்களின் பி.எஃப் தொகையைக் கணக்கில் கொண்டு வரதட்சணையில் இரக்கம் காட்டப்படுகிறது (இளம்பெண்கள் வெளியூர் காட்டன் மில்லுக்கு ஒப்பந்த ஊழியர்களாகச் சென்று இந்த மேரேஜ் ஸ்கீமை நிறைவு செய்கிறார்கள்).
இந்தத் தொழில் 17ஆம் நூற்றாண்டிலேயே தொடங்கியிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. சிகரெட்டின் வருகைக்கு முன்பு பீடிதான் பெரும்பான்மையான கரங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. சிகரெட் பரவலாகத் தொடங்கிய பிறகு பீடி மீதான வரியும் ஏற்றப்பட்டது. இந்தச் சுமையும் தொழிலாளர்கள் மீதே விழுந்தது. இதற்கு அடுத்தபடியாக, இலை சரியில்லை, தூள் பற்றாக்குறை போன்றவற்றையும் தொழிலாளர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். கிடைக்கும் சொற்ப ஊதியத்தில் தூளையும் இலையையும் வாங்கி மேலும் பாரம் சுமக்கிறார்கள் இந்தத் தொழிலாளர்கள்.
**கஷ்டம்தான் ஆனால்…**
“தினமும் பீடி சுத்துறதுல தான் என் மவளுக்கு காலேஜுக்கு பஸ் காசு கொடுத்துவிடுதேன். கடையில கடஞ்சொல்லி சாமான் வாங்கி சமைக்கலாம். பஸ்ல அப்படி சொல்ல முடியாதுல்ல?” என்கிறார் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டுவரும் அஜிதா.
“கஷ்டம்தான். ஆனால், சும்மா இருக்கறதுக்கு சுத்தி போட்டா தினத்துக்கும் சாப்பாட்டுக்கு ஆகும். வயக்காட்டு வேலையில கூலி வரும். எப்பவும் அந்த வேலை இருக்கிறதில்ல” என்கிறார் பீடித்தொழிலாளர் ஏசு அலங்காரம்.
அடிப்படைத் தேவைகளின் நிமித்தம் தினமும் புகையிலையைப் புகைக்காமலே அதனால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இவர்களின் ஆதாரத் தொழில் இது மட்டும்தான். சுற்று வட்டாரங்களில் வேறு எந்த வாழ்வாதாரமும் இவர்களுக்கு இல்லை. இந்தத் தொழில் ஆபத்தானது. ஆனால், அதற்காக இதை இவர்களால் விட்டுவிட முடியாது. இந்தத் தொழிலால் அதை சுற்றுபவர், விற்பவர் மட்டுமில்லாது, இடைத்தரகர்கள், அது தொடர்பான பொருட்களை சுற்றுபவர்களுக்கு விற்பவர்கள், கத்தரி சாணை செய்ய வருபவர் எனப் பலர் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.
**நலிவடைந்த தொழில், கதியற்ற தொழிலாளர்கள்**
இந்தத் தொழிலின் தற்போதைய நிலைகுறித்து திருநெல்வேலி மாவட்ட பீடித் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் (சிஐடியூ) வேல்முருகனிடம் பேசியபோது, “பீடி சுற்றும் தொழில் சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததுடன் ஒப்பிடும்போது, தற்சமயம் பாதி வேலையாகக் குறைந்துவிட்டது. முன்னர் கம்பெனிகள் வாரம் 6,000 வரை பீடி சுற்ற இலை, தூள் வழங்கிவந்தன. தற்போது 2,000 முதல் 3,000 வரையே வழங்கப்படுகிறது. சில கடைகளில் கமிஷன் போல போர்டு வண்டல் வசூலிக்கப்படுகிறது. இதற்கான இலையோ, தூளோ, கூலியோ அந்நிறுவனம் வழங்குவதில்லை. இது மக்களைக் கொள்ளையடிக்க வகுக்கப்பட்ட இன்னொரு ஏற்பாடு. சில நிறுவனங்கள் ஆறு நாட்கள் சுற்றும் பீடிக்கு மூன்று நாட்கள் பி.எஃப் பணத்தைக் கணக்கில்லாமல் எடுத்துக்கொள்கிறார்கள். இதனால், உழைத்த பணத்துக்கான சலுகையை முழுமையாகப் பெற முடியாமல் போகிறது” என்கிறார் அவர்.
முன்பெல்லாம், இந்தத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதை ஆன்லைன் பரிவர்த்தனையாக்கியதால் அதைப் பெற முடியாமல் சில பெற்றோர்கள் தவிக்கின்றனர். பீடித் தொழிலாளர்கள் நிறைய பேர் படிப்பறிவு அதிகம் இல்லாதவர்கள். உதவித்தொகை பெறும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லை. இதற்கு முன்பு 15 முதல் 18 கோடி வரை வழங்கப்பட்டுவந்த உதவித்தொகை கடந்த ஆண்டு வெறும் ரூ.24 லட்சமாகச் சுருங்கிவிட்டது என்று வேல்முருகன் விளக்குகிறார். இந்தத் தொழிலில் உள்ளவர்களுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவமனைகளும் முன்புபோல் இயங்கவில்லை என்றும் அவர் சொல்கிறார். மருந்து, மாத்திரைகளின் தட்டுபாடு அதிகம் என்கிறார்.
“புகையிலைக்குத் தடை, ஜிஎஸ்டி ஆகியவற்றால் இந்தத் தொழில் மேலும் நலிவடைந்து வருகிறது. அரசு இதற்கு மாற்றுப் பணி ஏதும் ஏற்படுத்தாத காரணத்தால் மக்கள் தொழில் நெருக்கடிக்கு ஆளாகிவருகிறார்கள். நொறுங்கு இலை, கறுப்பு இலை எனக் குறைபாடுடைய இலைகளைப் போடும்போதும், தூள் பற்றாக்குறை ஏற்படும்போதும் அதையும் தொழிலாளர்களே சமாளிக்க வேண்டியுள்ளது. இதனால், கடையில் கொடுக்கும் மூலப் பொருட்களுக்கு 1,000 பீடிக்கு 650 மட்டுமே தயார் செய்ய முடிகிறது. மீதம் 350 பீடிக்குக் கையிலிருந்து செலவு செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால் கூலியில் பாதியை இழக்க நேர்கிறது” என்று இத்தொழிலில் உள்ள இதர சிக்கல்களையும் வேல்முருகன் கவனப்படுத்துகிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த பீடித் தொழிலாளிகள் (ஓய்வூதியம் பெற தகுதி பெற்றவர்கள்) தற்போது 2.5 லட்சமாகக் குறைந்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
புகையிலையில் உள்ள கார்பன் மோனாக்சைடு, நிகோடின் போன்ற பொருட்கள் உடலுக்குள் நுழைகின்றன. இதனால், பல்வேறு உயிர்க்கொல்லி நோய்கள் மனிதனைத் தாக்கிக் கொண்டிருக்கின்றன என்ற காரணத்தால் புகையிலையைத் தடை செய்யப் பல முன்னெடுப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அப்படி முற்றிலும் தடை செய்யும் பட்சத்தில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இத்தொழிலை மட்டுமே நம்பி இயங்கி கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும், அவர்களுக்கான தொழில் மாற்றாக அரசு எதனை முன்னெடுக்கும் என்ற கேள்வி தற்போது பெரிதாக எழுந்துள்ளது.
**படங்கள்: மரிய பனி மோனிஷா. ப**
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
.
�,”