நாளை மறுநாள் பிரதமரை சந்திக்க இருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், “அவரிடம் தேவையான நிவாரண நிதியை வழங்க வலியுறுத்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை சென்றார். புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டப் பகுதிகளில் ஆய்வு செய்த முதல்வர், கஜா புயலால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களுக்குச் செல்லாமல் ஹெலிகாப்டர் மூலமாக திருச்சி திரும்பினார்.
பின்னர் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “புதுக்கோட்டையில் பார்வையிட்டுவிட்டு, பட்டுக்கோட்டை சென்று, சேதமடைந்த தென்னை மரங்களை நேரடியாக பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினேன். அதன்பிறகு திருவாரூர் சென்றோம். அங்கு தரையிறங்கும் சமயத்தில், கடுமையான மழை பெய்தது. அதனால் அங்கு செல்லமுடியாமல் நாகைக்கு சென்றோம், அங்கும் கடுமையான மழை பெய்ததால் தரையிறங்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் நேரடியாக திருச்சி வந்துவிட்டோம். மீண்டும் திருவாரூர், நாகை மாவட்டங்களுக்குச் செல்வோம். இதுகுறித்த முடிவு பிறகு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
“புயல் பாதித்த சில நாட்கள் கழித்துதான் சேதங்கள் தெரியவரும். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர், உடனே பார்த்துவிட்டு சென்றுவிடுவார். ஆனால் நாங்கள் அப்படியல்ல, எந்தெந்த பகுதிகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் மூலமாகத் தெரிந்துகொண்டு, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்ட பிறகுதான் அங்கு செல்ல முடியும். முதற்கட்ட பணிகளை முடிக்காமல் சென்றால் மக்கள் கேள்வி எழுப்புவர்” என்று தெரிவித்த முதல்வர், சேத மதிப்பீடுகளை கணக்கிட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஹெலிகாப்டரில் பார்வையிடும்போது தென்னை மரங்கள், வாழை மரங்கள் முறிந்து கிடப்பதை பார்த்ததாக குறிப்பிட்ட முதல்வர், இவற்றை துல்லியமாக கணக்கிடக் கூறியுள்ளேன். நிவாரணம் வழங்குவதில் எந்த விவசாயியும் விடுபட்டுவிடக் கூடாது என்றும் தெரிவித்தார்.
“சேதத்தினைக் கணக்கிட்டு தேவையான நிதியை மத்திய அரசிடம் கோருவோம். மத்திய அரசு சில சமயம் தருகிறார்கள், சில சமயம் குறைத்துத் தருகிறார்கள். கடந்தகாலத்தில் கேட்டதைவிட குறைவாகத்தான் கொடுத்தார்கள். நாளை மறுநாள் பிரதமரை சந்திக்க இருக்கின்றேன். தேவையான நிதியை அளிக்கக் கோரி அவரிடம் வலியுறுத்துவேன்” என்றும் தனது பேட்டியில் தெரிவித்தார்.
மேலும், “புயல் குறைவாக வீசியிருந்தால் இவ்வளவு சேதம் வந்திருக்காது. கடுமையாக வீசியதன் காரணமாகவே லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துவிட்டன. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்துவிட்டன. அதனையெல்லாம் மாற்ற வேண்டும். ஜீ பூம் பா என்றால் மின்கம்பம் சென்று நின்றுவிடாது. வயல் பகுதியில் ஒரு மின்கம்பத்தை நடுவது எவ்வளவு கஷ்டம் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று விவரித்த முதல்வர்,
மின் ஊழியர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து வேலை செய்துகொண்டிருக்கிறார்கள், அதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், கொச்சைப்படுத்தக் கூடாது எனவும் வலியுறுத்தினார். மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை மீட்புப் பணிகள் நடைபெறும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.�,