�
காதலர் தினத்தை முன்னிட்டு சாயிஷா தனது காதலை அறிவித்ததுடன் திருமணம் பற்றிய தகவலையும் வெளியிட்டார். ஆர்யாவுடனான அவரது காதல் உறுதிப்படுத்தப்பட்டவுடன் மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. தற்போது விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் இணைந்து எடுத்த காதலர் தின ஸ்பெஷல் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை புத்தாண்டு கொண்டாட்டத்திலிருந்து பகிர்ந்து வந்தனர். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டன.
தற்போது விக்னேஷ் சிவன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் இருவரும் இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து, “காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் தான் நீங்கள் செய்வதிலேயே சிறந்த காரியம். ஆகையால் காதலில் இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
காதலர் தினப் பரிசாக நயன்தாரா தனக்கு அளித்த ரோஜாக்களையும் புகைப்படம் எடுத்துப் பகிர்ந்துள்ளார் விக்னேஷ்சிவன். ‘காதலும் ரோஜாக்களும் நன்றி தங்கமே’ எனத் தலைப்பிட்டுள்ளார்.
இருவரும் தங்கள் காதல் வாழ்க்கை குறித்து வெளிப்படையாகப் பேசாவிட்டாலும் விக்னேஷ் சிவன் மட்டும் சமூக வலைதளங்கள் மூலம் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். 2015ஆம் ஆண்டு வெளியான நானும் ரௌடி தான் படத்திலிருந்து இருவருக்குமான உறவு தொடர்ந்து வரும் நிலையில் இருவரும் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டாலும் காதல் மற்றும் திருமண அறிவிப்பை வெளியிடவில்லை.�,