xநடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!

Published On:

| By Balaji

இராமானுஜம்

2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி நடைபெற்றது தென்னிந்திய நடிகர் சங்கதேர்தல். நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், சரத்குமார் தலைமையிலான அணியும் போட்டியிட்டன. இதில் பாண்டவர் அணி சார்பில் நிர்வாகிகள் பொறுப்புக்கு போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றனர்.

தலைவர், செயலாளர் பொறுப்புக்கு போட்டியிட்ட சரத்குமார், ராதாரவி இருவரும் தோல்வியை தழுவினர். தேர்தலில் வென்ற நாசர் தலைமையிலான பாண்டவர் அணி சில தேர்தல்வாக்குறுதிகளை அளித்திருந்தனர். அதில் முக்கியமானது நலிந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடத்தை கட்டுவது.

நலிந்த கலைஞர்களுக்கான ஓய்வூதியம் கொடுப்பது உடனடியாக தொடங்கப்பட்டு இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது.

நடிகர் சங்கதேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உரிய மரியாதை எங்களுக்கு விஷால் கொடுக்கவில்லை என கூறி எஸ்.வி.சேகர் மற்றும் சமீபத்தில் மறைந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் ஆகியோர் பாண்டவர் அணியிலிருந்து வெளியேறினார்கள்.

இதன் காரணமாக விஷால் தரப்புக்கு நெருக்கடி கொடுக்க நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு இடையூறாக எஸ்.வி.சேகர் ‘சிஎம்டிஏ’வில் புகார் கொடுத்தார், வழக்கும் தொடுத்தார்.

இதன் காரணமாக நடிகர் சங்க கட்டிடப் பணி ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், நடிகர் சங்கம் கட்டுவதற்கு இருந்து வந்த தடைகள் சட்டரீதியாக நீக்கப்பட்டு, நடிகர் சங்க கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு 50 சதவிதம் பணி முடியும் தருவாயில் தற்போதைய நிர்வாக குழுவின் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது.

நாசர் தலைமையிலான நிர்வாகக் குழு நீதிமன்றத்தில் சட்டப்படி 6 மாத கால நீட்டிப்பு பெற்றது. நடிகர் சங்க கட்டிடத்தின் 70 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு, மீதி கட்டிட பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

நடிகர் சங்க செயலாளர் விஷாலுடன் நெருக்கமாக இருந்து வந்த செயற்குழு உறுப்பினர்களான நடிகர்கள் உதயா, ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும், தங்களுடைய படங்கள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்ட போது தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக இருந்தும் விஷால் எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறி விஷால் அணியிலிருந்து பிரிந்து வந்தனர்

பிரிந்து வந்த இவர்கள் இருவரும், வரப்போகும் நடிகர் சங்க தேர்தலில் விஷாலை எதிர்த்து போட்டியிடப் போவதாக தொடர்ந்து பேசி வந்தனர். இதற்கு நடிகர்கள் மத்தியில் எந்தவிதமான ஆதரவு அலையும் உருவாகவில்லை. அதே நேரம் நடிகர் விஷாலுக்கு எதிராக பேசுபவர்களை ஒருங்கிணைக்கும் வேலையை தயாரிப்பாளர்கள் ஆளுங்கட்சியின் செல்லமான அமைச்சர் ஒருவர் ஆதரவுடன் செய்து வந்தனர்.

நடிகர் சங்கத்தின் பாண்டவர் அணிக்கு உறுதுணையாக இருந்து வந்தார் வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தர், நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். நடிகர் சங்கம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு நன்கொடை கொடுப்பது, நடிகர் சங்க கட்டிடப் பணிக்கு நன்கொடை கொடுப்பது, நலிந்த நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி புரிவதன் மூலம் தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி என நடிகர் சங்க பொறுப்பாளர்களுடன் நல்ல உறவோடு இருந்து வந்தார் ஐசரி கணேஷ்.

கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற பொருளாதார ரீதியாக பக்கபலமாக இருந்தவர்களில் ஐசரி கணேஷ் முக்கியமானவர்.

இவரது தந்தை நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் விஷால் கலந்து கொள்ளவில்லை. இதனை ஊதிப் பெரிதாக்கும் முயற்சியில் விஷால் எதிர் தரப்பு ஈடுபட்டது. விழாவுக்கு வர முடியாத சூழலை விஷால் கூறிய பின்னரும் ஐசரி கணேஷ் சமாதானமடையாமல் இருந்ததை விஷால் எதிர் அணி பயன்படுத்தி ஐசரி கணேஷ் தலைமையில் நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் போட்டியிட தயாராகி விட்டது.

விஷால் மீது தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மத்தியில் அதிருப்தி இருந்தாலும் நடிகர் சங்க செயலாளராக தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற கடுமையாக உழைத்துள்ளார் என்கிற அனுதாபம் நடிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்துள்ளது. இதனால் பாண்டவர் அணியை எதிர் கொண்டு தேர்தலில் வெல்வது எளிதான செயல் இல்லை என்பதால் இயக்குநர், நடிகர் பாக்கியராஜ் அவர்களை தலைவராக போட்டியிடவைக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பின் அவரது சம்மதம் பெறப்பட்டு தலைவராக கே.பாக்கியராஜ், பொது செயலாளராக ஐசரி கணேஷ் ஆகியோர் போட்டியிடுவதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிற பொறுப்புக்களுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய செல்லமான அமைச்சரே நேரடியாக ஈடுபட்டுள்ளாராம். அதன் விளைவுதான் விஷால் அணியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டவர்கள் நேற்றைய தினம் அணி மாறியுள்ளார்கள் .

எம்.ஜி.ஆர், சிவாஜி, எஸ்.எஸ், ராஜேந்திரன், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தர்ராஜன், போன்ற ஆளுமைகள் நிர்வாகிகளாக இருந்த தென்னிந்திய நடிகர் சங்கம், நடிகர் ராதாரவி பொறுப்புக்கு வந்த பின் பெயரளவில் திரைப்படத் துறையில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாத நிலையில் ஒரு சங்கமாக இயங்கி வந்தது.

நடிகர் சங்க தலைவராக விஐயகாந்த், செயலாளராக சரத்குமார் ஆகியோர் பொறுப்புக்கு வந்த பின் திரையுலகிலும், அரசியல் வட்டாரத்திலும் நடிகர் சங்கம் தவிர்க்க முடியாத அமைப்பாக மாறியது.

விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கியதால் நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் தலைவராக சரத்குமார், செயலாளராக ராதாரவி இருவரும் பொறுப்புக்கு வந்தனர். இவர்கள் மீது கடுமையான அதிருப்தியும், ஊழல் குற்றச்சாட்டும் உருவானதால் அதனை முன்வைத்து விஷால் தரப்பு 2015ஆம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் எந்த நிலையிலும் அரசியல் கட்சிகளோ, ஆளும் அரசாங்கமோ தலையிட்டதில்லை.

**தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வரலாற்றில் முதல் முறையாக நிர்வாகிகள் தேர்தலில் அரசியலும் – அதிகார வர்க்கமும் தலையிட தொடங்கியிருக்கிறது. இதற்கு உறுதுணையாக விஷாலுக்கு எதிராக, அவருடன் நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்கள் என பெரும் கூட்டம் பணியாற்ற காத்திருக்கிறது என்கிறார்கள் சங்கத்தில் அரசியல் தலையீட்டை விரும்பாத நடுநிலையான நடிகர்கள்.**

சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு இணையாக பணம் புரளவிருக்கிற நடிகர் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில் நடைபெறவுள்ள சுவராஸ்யங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)

**

**

[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share