தேர்தல் பறக்கும் படை சோதனையில் ஈடுபடுவதாகக் கூறி சுமார் 1 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்துள்ளது ஒரு கும்பல்.
வரும் ஏப்ரல் 18ஆம் தேதி தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10ஆம் தேதியன்று, நாடு முழுவதும் 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்துவது குறித்த அறிவிப்பினை வெளியிட்டார் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. இதையடுத்து, உடனடியாக எல்லா இடங்களிலும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
கடந்த ஒரு வார காலமாகத் தமிழகம் முழுவதும் வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் தேர்தல் பறக்கும் படையினர். தொடர்ச்சியாக, உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் பணத்தைப் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சூழலில், தேர்தல் பறக்கும் படை பெயரில் ஒரு கும்பல் கொள்ளை முயற்சிகளை நடத்தி வருவது தெரிய வந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் தண்டலத்தில் உள்ள கட்டுமான நிறுவனமொன்றில் மேலாளராகப் பணிபுரிபவர் உதயகுமார். நேற்று (மார்ச் 15) இவர் சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு இடத்தில் இருந்து 1.07 கோடி ரூபாய் தொழில் கடனாகப் பெற்றார். அங்கிருந்து தண்டலத்துக்கு காரில் சென்றார். அவருடன் கணக்காளர் இளங்கோ மற்றும் கார் ஓட்டுநர் இருந்துள்ளனர்.
இந்த நிலையில், சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே அவரது காரை மறித்தது மற்றொரு கார். அதில் இருந்து இறங்கியவர்கள், உதயகுமாரின் சோதனையிடப் போவதாகத் தெரிவித்தனர். அப்போது, காரில் இருந்த பணம் கண்டறியப்பட்டது. சோதனையிட்ட நபர்களைத் தேர்தல் பறக்கும் படையினர் என்றே உதயகுமார் உள்ளிட்ட மூவரும் நினைத்துள்ளனர். அதன்பின், உதயகுமாரை அவரது காரிலேயே அந்த நபர்கள் அழைத்துச் சென்றனர். பூந்தமல்லி அருகே சென்றபோது, 1.07 கோடி ரூபாய் பணத்தைப் பறித்துவிட்டு, உதயகுமாரை அடித்து உதைத்துவிட்டுத் தப்பிச் சென்றனர். இது குறித்து, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவன உரிமையாளரிடம் அவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று இரவு சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் உதயகுமார் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
**போலீசார் என்று கூறி கொள்ளை*8
கடந்த 9ஆம் தேதியன்று சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலை அருகே மாநகரப் பேருந்தை மறித்தனர் சில மர்ம நபர்கள். போலீசார் என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு, பேருந்தில் இருந்த கோபிநாத் என்பவரைக் கஞ்சா கடத்தல் தொடர்பாக விசாரிப்பதாகத் தெரிவித்தனர். அதன்பின், அவரைப் பேருந்தில் இருந்து இறக்கி, தாங்கள் கொண்டுவந்த காரில் ஏற்றிச் சென்றனர். செல்லும் வழியில் கோபிநாத்தை தாக்கி, அவரிடம் இருந்த 98 லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்தனர் மர்ம நபர்கள்.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சென்னை பர்மா பஜாரில் வசூலான பணத்தைத் திருச்சியில் உள்ள ஒரு உறவினரிடம் கொண்டு சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார் கோபிநாத். இதனை நன்கு அறிந்த ஒரு கும்பல் இக்கொள்ளையில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது தேர்தல் பறக்கும் படை என்று கூறி சில மர்ம நபர்கள் அதேபாணியில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.�,