xதற்செயலாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

public

அ. குமரேசன்

1992 டிசம்பர் ஆறாம் தேதி அயோத்தி நகரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட அட்டூழியம் நடந்து சரியாக ஓர் ஆண்டு முடிகிறது. 1993 டிசம்பர் ஆறாம் தேதியன்று மதுரையில் ‘தீக்கதிர்’ நாளேட்டின் ஆசிரியர் குழு ஆலோசனைக் கூட்டம். அதில் கலந்துகொள்வதற்காக பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அன்றைய தலைமை ஆசிரியர் வே. மீனாட்சி சுந்தரம், சென்னைப் பதிப்பு பொறுப்பாசிரியர் சு.பொ அகத்தியலிங்கம் ஆகியோருடன் நானும் சென்னை எழும்பூர் நிலையத்திலிருந்து முதல் நாள் இரவு புறப்பட்டுப் போய்க்கொண்டிருக்கிறேன்.

அதிகாலை 4 மணி அளவில் வண்டி ஏதோ ஒரு நிலையத்தில் சற்று கூடுதல் நேரம் நிற்பதை அரைத் தூக்கத்தில் உணர முடிகிறது. நாங்கள் இருந்த பெட்டியில் கழிப்பறைக்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்து நடுப் படுக்கையில் ஏறிப் படுத்துக்கொண்டேன். சில நொடிப்பொழுதில் படாரென்ற பெருத்த ஓசை கேட்கிறது. எங்கள் பெட்டிக்குள் புகை பரவுகிறது. நிலைய நடைமேடையிலோ, வண்டிக்கு உள்ளேயோ மின்சார பல்பு ஏதேனும் வெடித்திருக்கக்கூடும் என்றுதான் நினைத்தேன். அந்த நொடியில் தோன்றிய எண்ணப்படி பெட்டியின் சன்னல்களைத் திறந்து விடுமாறு மற்ற பயணிகளிட்ம் உரக்கச் சொன்னேன், புகை வெளியேறுவதற்காக. அடுத்த பெட்டியிலிருந்து வந்த அலறல் ஒலியையும், நடைமேடையிலிருந்து “அய்யய்யோ”, “கோச்சுக்குப் பக்கத்திலே நிற்காதே, தள்ளிப் போ, வேகமாப் போ” என்ற கூச்சல்களையும் அப்போதுதான் கேட்க முடிந்தது. எல்லோரும் குழந்தைகளையும் பெட்டிகளையும் எடுத்துக்கொண்டு பதற்றத்தோடு கீழே இறங்குகிறார்கள். அது திருச்சி நிலையம்.

மூன்று பேர் இறந்துவிட்டார்கள், ஏழெட்டுப் பேர் பலத்த காயமடைந்திருக்கிறார்கள். கீழ்ப்படுக்கைகளிலும், ஒரு நடுப்படுக்கையிலும் படுத்திருந்த அந்த மூன்று பேர் சிதைந்து கருகிக் கிடந்த காட்சியை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை. நான் பயன்படுத்திவிட்டு வந்திருந்த எங்கள் பெட்டியின் கழிப்பறை குண்டுவெடிப்பில் சிதைந்திருந்தது, கூடுதலாக சில நொடிகள் அதிலேயே இருந்திருப்பேனானால் என்னவாகியிருக்கும் என்ற நினைப்பு இன்றளவும் என்னை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. சில நொடிகள் முன்னதாகவே திரும்பியது எவ்வளவு தற்செயல் வாய்ப்பு!

குண்டு வெடித்த பெட்டியில் கவிஞர் இன்குலாப் ஏறியிருந்ததும், அந்தத் தற்செயல் சந்திப்பில் எழும்பூரில் இருந்து வண்டி புறப்படும் வரையில் அவரோடு பேசிக்கொண்டிருந்ததும் சட்டென நினைவுக்கு வர, பதைப்போடு அவரைத் தேடினேன். நடைமேடையில் இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த அவர் நெஞ்சப் படபடப்பைத் தணித்துக்கொண்டிருந்தார். ஆங்காங்கே மருத்துவர் குழுவினர் முதலுதவிகளைச் செய்துகொண்டிருந்தார்கள். மதுரைக்கு சிறப்பு ரயில் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆயினும் நாங்கள் பேருந்திலேயே போய் விட முடிவு செய்தோம். கவிஞரும் எங்களோடு வந்துவிடுவதாகச் சொன்னார்.

நான்கு பேரும் வெளியே வந்து பேருந்து பிடித்து மதுரைப் பயணத்தைத் தொடர்ந்தோம். அந்தக் காலைப் பொழுதில் சாலையின் இரண்டு பக்கங்களிலும் கவிழ்ந்துகிடந்த லாரிகள், எலும்புக்கூடாய்த் தெரிந்த ஓரிரு பேருந்துகள், மரங்களில் மோதி நசுங்கியிருந்த கார்கள் என வரிசையாய்க் கண்ணில் பட்டன. அப்போது இன்குலாப் சொன்னார்: “எல்லாவற்றையும் பார்க்கிறபோது விபத்துகளை விட நாம் வாழ்ந்துகொண்டிருப்பதுதான் தற்செயலானதாகத் தெரிகிறது.”

அந்தப் பொழுதிலும் எப்படி இவரால் கவித்துவமாக வெளிப்படுத்த முடிகிறது என்ற வியப்போடு, அவர் சொன்னதில் இருந்த தற்செயல் தத்துவம் பற்றிய சிந்தனை என்னை மௌனமாக்கியது.

இந்தப் பேரண்டம் உருவானது, அதில் பூமி முளைத்தது, அதில் உயிர்கள் முகிழ்த்தது, மனிதர்கள் பரிணமித்தது எல்லாமே தற்செயல் நிகழ்வுகள் என்றுதான் அறிவியல் உணர்த்துகிறது. இதை முதலில் புரிந்துகொண்டுவிட்டால் நம்மைப் போட்டுக் குழப்பிக்கொண்டிருக்கிற, நம்மை அடக்கி ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிற பல் போதனைகளிலிருந்தும் கோட்பாடுகளிலிருந்தும் நம்பிக்கைகளிலிருந்தும் விட்டு விடுதலையாகிச் சுதந்திர மனிதர்களாகிவிட முடியும். பேரண்டத்தையும் சூரியனையும் பூமியையும் உயிர்களையும் மனிதர்களையும் திட்டமிட்டுப் படைத்த ஒரு கடவுள் இருக்கிறார், அல்லது ஒரு சக்தி இருக்கிறது என்ற போதனைகள் அந்தச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறவையே.

கடவுள் திட்டமிட்டுப் படைத்தார் என்றால் எந்த மதத்தின் கடவுள், ஏன் மற்ற மதங்களின் கடவுள்களை விட்டுவைத்தார், உலகத்தை அவர் ஏன் இவ்வளவு குறைபாடுகளோடு படைத்தார், சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளை அவரால் சரிசெய்ய முடியாதது ஏன், கடவுள்தான் படைத்தார் என்றே வைத்துக்கொண்டாலும் அவரை வணங்கி வழிபட்டால்தான் நாம் வேண்டியது கிடைக்குமா, அவர் சரியாகத்தான் படைத்தார் மனிதர்கள்தான் சீர்குலைத்துவிட்டார்கள் என்றால் மகத்தான கடவுளை விடவும் அற்ப மனிதர்கள்தானே ஆற்றல் மிக்கவர்களாகிறார்கள்… இப்படியான கேள்விகள் நம்மை உறங்க விடாமல் விரட்டும்.

உறங்குவதற்கு இரண்டே வழிகள் இருக்கின்றன. இப்படியெல்லாம் கேள்வி கேட்டு மூளைக்கு வேலை கொடுக்காமல் காலங்காலமாகச் சொல்லப்படும் “நம்பிக்கை” போதுமென்று படுப்பது ஒரு வழி. இன்னொரு வழி, அப்படியெல்லாம் தனியொரு சக்தி எதுவும் தனியாக உட்கார்ந்துகொண்டு, திட்ட வரைபடம் தயாரித்து, அதன்படி பேரண்டத்தைப் படைக்கவில்லை என்று புரிந்துகொள்வது. இந்தப் புரிதலால் கிடைக்கிற உறக்கத்தின் இனிமை வேறு எந்தத் தூக்கத்தோடும் ஒப்பிட முடியாதது..

அப்படியானால், பிரபஞ்சம் எனப்படும் இந்தப் பேரண்டம் எப்படி உருவானது? தற்செயலாக! ஆம், தற்செயலாகத்தான்!

அதெப்படி? துல்லியமாக அந்தந்த இடத்தில் இருக்கிற நட்சத்திரங்கள், வரையறுக்கப்பட்ட விதிப்படி நட்சத்திரங்களை சுற்றி வருகிற கோள்கள், மாறி மாறி வருகிற பருவ காலங்கள், உயர்ந்து நிற்கும் மலைகள், தாழ்ந்த பரப்பில் பள்ளத்தாக்குகள், இரண்டுக்குமிடையே ஓடிவரும் ஆறுகள், திட்டவட்டமான உருவ அமைப்புடன் இத்தனை கோடி உயிரினங்கள், இனிமையாய் நிகழும் பிறப்புகள், இறுதியாய் இறப்புகள், இடையே கிடைக்கும் வாழ்க்கை அனுபவங்கள்… இவையெல்லாம் எப்படி வெறும் தற்செயல்களாக இருக்க முடியும்? மதங்கள் அடையாளப்படுத்துகிற கடவுள்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள்கூட, நமக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி இருக்கிறது என்று கருதித் தடுமாறுகிற இடம் இது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இரண்டு அறிவியலாளர்கள் தங்களது சோதனைக் கூடத்துக்கு வெளியே அமைத்திருந்த தொலையுணர்வு வலைக்கம்பியில் இருந்து மாறுபட்ட ஒலி வருவதை கேட்டனர். புறாக்கள் வந்து அமர்வதால் அந்த ஒலி கணினியில் பதிவாகிறது என்று நினைத்து, தொடர்ந்து சில நாட்கள் துப்பாக்கியால் சுட்டு புறாக்களை விரட்டினர். அதன் பிறகும் அந்த தொடர்ச்சியான ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. பின்னர் நடத்திய ஆராய்ச்சிகளில் புவியில் எங்கும் அந்த ஒலி கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது என தெரியவந்தது. அவர்கள் நடத்திக்கொண்டிருந்த ஆராய்ச்சி வேறொரு நுண்ணலை சம்பந்தமானது. ஆனால் தற்செயலாக அவர்கள் பதிவு செய்த இந்த ஒலி என்ன என்று உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர்கள் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். பேரண்டம் உருவாவதற்கு காரணமான, ‘பிக் பேங்’ என்று சித்தரிக்கப்படுகிற பெருவெடிப்பு நிகழ்விலிருந்து புறப்பட்ட அண்டப் பேரொலியின் (காஸ்மிக் சவுண்ட்) தொடர்ச்சிதான் அது என்று கண்டுபிடித்தனர்.

அந்த இரண்டு அறிவியலாளர்களும் மேற்கொண்டிருந்த ஆராய்ச்சியே வேறு. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இந்தத் தற்செயலான இந்த அண்டப் பேரொலிக் கண்டுபிடிப்பு, கிட்டத்தட்ட 1,380 கோடி ஆண்டுகளுக்கு முன் பேரண்டம் உருவானதன் பெருவெடிப்பு பற்றிய மேலும் தெளிவான கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச் சென்றது. அதுதான் பேரண்டத்தின் காலம், ஒளி, வெப்பம், ஒலி, அணுக்கதிர்கள், அணுக்கள், விரிந்துகொண்டே இருக்கும் நட்சத்திர வெளிகள் அனைத்தையும் முடுக்கிவிட்டது.

சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் நம் சூரிய மண்டலம் அந்தப் பெருவெடிப்பின் தொடர்ச்சியில் உருவானது. சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் ஒன்றாக நம் பூமி 454 கோடி ஆண்டுகளுக்கு முன் உருண்டு திரண்டது. 350 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் புல் செடி கொடி மரம் உள்ளிட்ட தாவரங்களுக்கும் புழு பூச்சி பறவை கால்நடை உள்ளிட்ட விலங்குகளுக்கும் மூலமான நுண்ணுயிர்கள் உருவாகின. கால்நடை விலங்கினங்களில் ஒன்றான மனித இனத்தின் முன்னோர்கள் 6 லட்சத்து 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் பரிணமித்தார்கள். உடலமைப்பு அடிப்படையிலான நவீன மனிதர்களின் அம்மைகளும் அப்பன்களும் பிறந்து 2 லட்சம் ஆண்டுகள்தான் கடந்துள்ளன.

தற்செயலான அந்தப் பெருவெடிப்பு நிகழாமல் போயிருந்தால்? அண்ட வெளிகள் இல்லை, நட்சத்திரங்கள் இல்லை, கோள்கள் இல்லை, பூமி இல்லை, காற்று இல்லை, வெளிச்சம் இல்லை, வெப்பம் இல்லை, உயிர்கள் இல்லை, இதை எழுத நான் இல்லை, படிக்க நீங்கள் இல்லை. பெருவெடிப்பிலிருந்து புறப்பட்ட அண்ட விசையின் இயக்கங்களால், அணுக்களின் சேர்மானத்தால் இவையனைத்தும் உருவாகின.

அந்தப் பெருவெடிப்புக்குக் காரணமான ஒன்று இருந்திருக்கத்தானே வேண்டும், அல்லது அதை நிகழ்த்திய ஒருவர் இருந்திருக்கத்தானே வேண்டும் என்று கடவுள் நம்பிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்தப் பிரபஞ்சம், இந்த வாழ்க்கை… இதெல்லாம் தற்செயலா அல்லது இறைச் செயலா?

(நாளை தொடரும்)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *