ஒரே நாளில் 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை ஆறு பெண்களிடம் இருந்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
ஜுவைரியா பாத்திமா நாச்சியார் (வயது 42) என்ற பெண், நேற்று (நவம்பர் 25) சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் இந்தியா வந்தார். சென்னை விமான நிலையத்தில் இறங்கிய பாத்திமாவிடம் கடத்தப்பட்ட தங்கம் இருப்பதாகச் சந்தேகித்த அதிகாரிகள், அவரை வழிமறித்துச் சோதனை நடத்தினர். இரண்டு கச்சா தங்கச் சங்கிலிகள், வெளிநாட்டு குறிப்புகளுடனான நான்கு தங்கக் கட்டிகள் என்று மொத்தமாக 689 கிராம் எடை கொண்ட தங்கத்தை அவர் மறைத்து எடுத்துவந்தது சோதனையில் கண்டறியப்பட்டது. இவற்றின் மதிப்பு மட்டும் 22 லட்சம் ரூபாயாகும். இவரிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்தது. இதையடுத்து, பாத்திமா கைது செய்யப்பட்டார்.
இதேபோல சீதாமலானி (வயது 53), பாத்திமா பர்சானா (வயது 29), கல்யாணி குமுதலதா (வயது 46), விமலாவதி குமரிகமி (வயது 47), சிதி ரஜீனா (வயது 46) ஆகிய 5 பெண்கள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று சென்னை வந்திறங்கினர். கொழும்பிலிருந்து சென்னை வந்த இவர்கள் ஐந்து பேரிடமும் இலங்கை பாஸ்போர்ட் இருந்தது. இவர்களிடமிருந்து 10 கச்சா தங்கச் சங்கிலிகள் உட்பட மொத்தம் 1,291 கிராம் எடை கொண்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட இந்த தங்கத்தின் ஒட்டுமொத்த மதிப்பு 44 லட்சம் ரூபாயாகும்.
நேற்று ஒரு நாளில் மட்டும் ஆறு பெண்களிடமிருந்து ஒட்டுமொத்தமாக 63 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட தங்கத்தை சென்னை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.�,