இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் 15ஆவது லீக் போட்டி நேற்று (டிசம்பர் 3) புனேவில் உள்ள ஸ்ரீஷிவ் சத்ரபதி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. அதில் சென்னையின் எஃப்.சி அணி, புனே சிட்டி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
கடந்த மாதம் (நவம்பர்) 17ஆம் தேதி தொடங்கிய இந்தியன் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் சென்னை மற்றும் புனே அணிகள் மோதின. தொடக்க முதலே இரு அணி வீரர்களும் சமமாக விளையாடியதால் கோல் அடிக்க முடியாமல் இரு அணி வீரர்களும் தடுமாறினார். முதல் பாதி முடிவதற்கு முன்னர் சென்னை அணி வீரர் அடித்த பந்தை புனே அணி வீரர் கோல் லைனிற்கு மிக அருகில் சென்று தடுத்ததால் சென்னை அணி கோல் வாய்ப்பு நூலிழையில் தவறியது.
அதன்பின்னர் தொடர்ந்து இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் அடிக்க முயற்சி செய்தனர். போட்டியின் 80ஆவது நிமிடத்தில் சென்னை அணியின் கேப்டன் ஹென்ரிக் சேரேனோ கார்னர் கிக்கை சரியாக கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைத்தார். அதன் பின்னர் புனே அணியின் வீரர்கள் கோல் அடிக்காமல் இருக்க சென்னை அணி வீரர்கள் தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த லீக்கில் சென்னை அணி பெறும் இரண்டாவது வெற்றி ஆகும். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
நேற்று நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் மற்றும் மும்பை சிட்டி அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் போட்டி சமனில் முடிந்தது.�,