சிங்கப்பூரில் உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்த தியாகு செல்வராஜூ, சிவகுமார் சுப்பிரமணியன் ஆகிய 2 தமிழர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளியின் போது ஏற்படும் காற்று மாசுபாடு காரணமாக, இந்தியாவில் பட்டாசு வெடிப்பதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. நாடு முழுவதும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தில், இந்த உத்தரவை மீறி பட்டாசு வெடித்ததாக 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்ததாக தியாகு செல்வராஜூ, சிவகுமார் சுப்பிரமணியன் ஆகிய 2 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களைச் சிறையில் அடைத்தனர் சிங்கப்பூர் போலீசார்.
இருவரும் பட்டாசு வெடித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதேபோல சிங்கப்பூரிலுள்ள வேறு சில இடங்களிலும் உரிய அனுமதி இல்லாமல் பட்டாசு வெடித்ததாகச் சீனர்கள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.�,