பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் முதல் காலாண்டை விடக் குறைவாக இருக்கும் என ஆய்வு ஒன்று கூறுகிறது.
இது தொடர்பாக இக்ரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும், மொத்த மதிப்புக் கூட்டு வளர்ச்சியும் இரண்டாவது காலாண்டில் முறையே 7.2 சதவிகிதம் மற்றும் 7.1 சதவிகிதம் வரையில் குறைவாகவே இருக்குமெனவும், இந்த வளர்ச்சி முதல் காலாண்டு வளர்ச்சியான 8.2 சதவிகிதம் மற்றும் 8 சதவிகிதம் அளவை விடக் குறைவானது எனவும் தெரிவித்துள்ளது. விவசாயத் துறை நலிவு மற்றும் விலைவாசி உயர்வு, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் ஏற்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்றவற்றால் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியும், மொத்த மதிப்புக் கூட்டு வளர்ச்சியும் குறையும் என்று இக்ரா தெரிவித்துள்ளது.
பருவநிலை பாதிப்பு, வெள்ளச் சேதம், பூச்சித் தாக்குதல் போன்ற காரணிகளால் பயிர்கள் சேதமடையும். இதனால் நடப்புக் காலாண்டில் விவசாய வளர்ச்சி பாதிப்படையும் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. வங்கி டெபாசிட், அரசாங்கத்தின் வட்டி அல்லாத வருவாய் செலவினம், விமானம் மற்றும் கப்பல் வழி சரக்கு போன்றவற்றால் சேவை துறை முதல் காலாண்டில் எட்டிய 7.3 சதவிகித வளர்ச்சியை விட நடப்பு காலாண்டில் 7.8 சதவிகிதம் வளர்ச்சியை எட்டும். இதற்கு மாறாகப் பெரு நிறுவனப் பத்திரங்கள், பெரு நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் ஆகியவற்றில் ஒருங்கிணைந்த வளர்ச்சி இருப்பினும் முதல் காலாண்டைவிடக் குறைவான வளர்ச்சியே இருக்கும் என்று இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.�,