xசண்டே ஸ்பெஷல்: பலகாரங்களின் சுவையைக் கூட்ட…

Published On:

| By Balaji

வீட்டிலேயே பலகாரங்கள் செய்தால் என்ன என்று நினைப்பவர்களின் ஆசையைச் சில பலகாரங்களின் சுவை குறைத்துவிடும். தட்டை, தேன்குழல், முறுக்கு, சீடைகள், அவல் பலகாரங்களின் சுவையைக் கூட்ட டிப்ஸ் உண்டா என்று நினைப்பவர்களுக்கான ஸ்பெஷல் டிப்ஸ் இவை.

* தட்டை தயாரித்தவுடன் எண்ணெயில் போடுவதற்கு முன்பு தட்டையை 4, 5 இடங்களில் ஃபோர்க்கால் குத்திவிட்டு பிறகு பொரித்தால் எண்ணெய் முழுவதுமாகப் பரவி தட்டை நன்றாக வெந்து கரகரப்பாக, சுவையாக இருக்கும்.

* தேன்குழல் தயாரிக்கும்போது வெண்ணெயை மாவுடன் சேர்த்துப் பிசைவதற்குப் பதிலாக சூடான எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன் சேர்த்துப் பிசைந்து தேன்குழல் செய்தால், தேன்குழல் கம்பிகள் எண்ணெயில் பிரியாமல் முழு தேன்குழலாக வரும்.

* முறுக்கு மாவு பிசையும்போது மாவை மொத்தமாகத் தண்ணீர்விட்டுப் பிசைந்து வைத்தால் மாவு புளித்து முறுக்கு சிவந்துவிடும். மொத்த மாவை நான்கு பாகங்களாகப் பிரித்து ஒரு பாகத்துடன் தேவையான அளவு உப்பு, வெண்ணெய், சீரகம் சேர்த்து அளவாக நீர்விட்டு பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசைந்து பொரித்தெடுத்தால் முறுக்கு வெண்மையாகவும், கரகரப்பாகவும் இருக்கும். இதே மாதிரி மீதியுள்ள ஒவ்வொரு பாகத்தையும் தயாரித்து (ஒரு பங்கு தயாரித்து முடித்தவுடன்) எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

* கார முறுக்கு தயாரிக்கும்போது மிளகாய்த்தூள் சேர்த்தால் சிவந்துவிடும். தேவையான மிளகாய்களை (காய்ந்த மிளகாய்) நீரில் அரை மணி நேரம் ஊறவைத்து உப்பு, பெருங்காயம் சேர்த்து அரைத்து மாவில் சேர்த்துக் கலந்து முறுக்கு பிழிந்தால் முறுக்கு சிவக்காமல் அதிக சுவையுடன் இருக்கும்.

* அவல் பாயசம் செய்யும்போது அவலை நெய்யில் வறுத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, பாலில் வேகவைத்து சர்க்கரை, ஏலக்காய், உலர் பருப்புகள் வறுத்துச் சேர்த்தால் பாயசம் பார்ப்பதற்கு நன்றாகவும், மிகுந்த சுவையுடனும் இருக்கும்.

* சீடை செய்து துணியில் அரை மணி நேரம் உலர்த்திய பிறகுதான் நிறைய எண்ணெய் வைத்து நிறைய சீடைகள் மூழ்கும் அளவு போட வேண்டும். குறைந்த சீடைகளை நிறைய எண்ணெயில் போட்டால் சீடை வெடிக்கும். சீடைகளை உருட்டும்போது அழுத்தி வழவழப்பாக உருட்டக் கூடாது. லேசாக கைகளால் உருட்டி அப்படியே போட வேண்டும்.

[நேற்றைய டிப்ஸ்: பூண்டு புரொக்கோலி மஷ்ரூம் ஃப்ரை](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/02/15/4)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share