வெயில் காலத்தில் சோர்வு, தாகம், பித்தம், சருமச் சுருக்கம், வியர்குரு, தோல் கறுத்துப் போவது, முகப்பரு, பசியின்மை, டயரியா, உடம்பில் நீர்ச்சத்து வற்றிப் போவது போன்ற பாதிப்புகள் அதிகமாக இருக்கும். இவையெல்லாம் கோபம், பொறுமையின்மை போன்ற மனப்பிரச்னைகளையும் உருவாக்கும். எனவே, மனமும் உடலும் குளுமையாக சில டிப்ஸ்…
• தாகம் எடுத்தால் ‘அப்புறமா குடிச்சுக்கலாம்’ என்று தள்ளிப்போட வேண்டாம். மண்பானைத் தண்ணீர் மிக நல்லது.
• இயற்கை அந்தந்த காலநிலைக்கு உடலின் தேவைக்கு ஏற்ப சீஸனல் பழங்கள் மற்றும் காய்கறிகளை விளைவிக்கிறது. எனவே, ஒவ்வொரு சீஸனிலும் அந்த சீஸனுக்குரிய பழத்தை அதிக அளவில் சாப்பிடவும்.
• இந்த சீஸனில் அதிகம் கிடைக்கும் மாம்பழத்தை, சூடு என்று சொல்லி சிலர் ஒதுக்குவார்கள். வேனல் கட்டிகள், வியர்குரு போன்ற பாதிப்பு இருப்பவர்களைத் தவிர, மற்றவர்கள் தாராளமாக மாம்பழம் சாப்பிடலாம்.
• வெயிலால் தலை முழுவதும் வியர்த்து அதனால் வரும் ஜலதோஷத்துக்கு எண்ணெய்க் குளியல் பெஸ்ட் சாய்ஸ். தலையுடன் உடம்புக்கும் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு குளிக்கலாம். வெயிலில் அலைபவர்கள் எண்ணெய்க்குப் பதில் உடலில் நெய் தடவி ஊறவிட்டுக் குளித்தால், வெயிலால் கறுத்த சருமம் நிறத்தை மீட்கும்.
• பச்சையாகச் சாப்பிடக்கூடிய வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளை நொறுக்குத் தீனிகளுக்குப் பதில் சாப்பிடலாம்.
• கார்பன் டை ஆக்ஸைடு அடைத்த குளிர்பானங்கள் உடம்பின் எரிச்சலை இன்னும் அதிகரிக்கவே செய்யும். அவற்றைத் தவிர்த்து ஃபிரெஷ் ஜூஸ், நீர் மோர் போன்றவற்றை ஐஸ் சேர்க்காமல் குடிப்பது உடம்பையும் சருமத்தையும் குளிர்ச்சியாக்கும்.
• இரவு உறங்கச் செல்வதற்கு முன் உள்ளங்கால்களில் விளக்கெண்ணெய் தடவிவிட்டு படுத்தால் உடல் குளிர்ச்சியாகும்.
கடும் கோடையில் உடலில் நீர்ச்சத்து குறைந்து, உடல் வறட்சியாவதை `டீஹைட்ரேஷன்’ என்பார்கள்.
**இதைத் தவிர்க்க…**
• காலையில் எழுந்ததும், வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும், தூங்கச் செல்வதற்கு முன்பும் தண்ணீர் அருந்தலாம்.
• உடற்பயிற்சி செய்யத் தொடங்கும் முன்பு, செய்து முடித்த பிறகு தண்ணீர் அருந்தலாம்.
• தாகம் எடுக்கிறதோ, இல்லையோ, ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை சிறிதளவு தண்ணீர் குடிக்கலாம்.
• சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடிப்பது நல்லது.
• தொடர்ந்து தண்ணீர் குடிக்கப் பிடிக்கவில்லை என்றால், தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சைச் சாறுவிட்டு அருந்தலாம். புத்துணர்வு கிடைக்கும்.
[நேற்றைய ரெசிப்பி: வெந்தயக் கஞ்சி!](https://minnambalam.com/public/2020/05/23/3/kitchen-keerthana-vendhayakanji)�,