சட்டப்பேரவையில் சசிகலாவை புகழ்ந்து பேசுவது தான் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது என்று திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இன்று காலையில் சட்டப்பேரவை கேள்வி நேரத்தின் போது சட்டத்துறை நடவடிக்கைகள் குறித்து திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா அவர்களின் எழுப்பிய கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சர் பதில் அளித்தபோது, உறுப்பினரை குற்றம் சாட்டி பேசினார்.
இந்த விவாதத்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில்,
பேரவைத் தலைவர் அவர்களே, எங்கள் கட்சியின் உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா கேட்ட கேள்விக்கு சம்மந்தப்பட்ட அமைச்சர் பதில் தந்து கொண்டிருக்கிறார். ஆனால் இடையில், ‘உறுப்பினர் எதையும் தெரிந்து கொள்ளாமல் வந்து பேசுகிறார்’, என்று ஏதோ எங்கள் உறுப்பினரை குறை சொல்வது போல, குற்றம் சொல்வது போல அவரது பேச்சு அமைந்திருக்கிறது. கேள்வி நேரத்தில் இதுபோன்ற குறைகளை, குற்றங்களை அதுவும் ஒரு உறுப்பினரை சுட்டிக்காட்டிச் சொல்வது என்பது மரபல்ல. எனவே, இது முறைதானா? என்பதை எடுத்துச்சொல்லி, அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறினார்.
அதன்பின்னர், அவை நடவடிக்கை முடிந்து அவர் வெளியே வந்தபோது செய்தியாளர்களிடம் பேசுகையில், கேள்வி நேரத்தின்போது ஜெயலலிதாவை புகழ்ந்து பேசுவது, சசிகலாவை புகழ்ந்து பேசுவது, சின்னம்மா, பெரியம்மா, குட்டிம்மா, என்றெல்லாம் பேசுவது ஆகியவைதான் சட்டப்பேரவையில் நடந்து கொண்டிருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.�,