தமிழகத்தில் பத்தாயிரம் கோயில்களைக் காணவில்லை என்று பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது. தமிழக அரசின் அலட்சியப் போக்கே தீ விபத்திற்குக் காரணம் என்று இந்து அமைப்பினர் குற்றம்சாட்டி வருகின்றனர். மதுரை மீனாட்சியம்மன் கோவிலைப் பார்வையிட்ட ஹெச் ராஜா கோவில்களிலிருந்து இந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று கூறினார். இந்து அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இக்கோரிக்கையைத் தமிழகச் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கடுமையாக எதிர்த்தார்.
இது தொடர்பாகத் தொடர்ந்து வலியுறுத்திவரும் ஹெச்.ராஜா நேற்று (பிப்ரவரி 5) செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்து அறநிலையத் துறை சட்டம் 1951இன்படி உண்டியல் வைத்திருந்தால் கோவில்களுக்குள் இந்து அறநிலையத்துறை வந்துவிடுகிறது. இவ்வாறு கோவில்கள், மடங்கள், அறக்கட்டளைகள் என்று தமிழகத்தில் 38,635 கோவில்கள் இந்து அறநிலையத் துறை வசம் உள்ளது. இந்து அறநிலையத் துறை எடுக்கும்போது இந்த கோவில்களில் வழிபாடு நடைபெற்றுவந்தது. ஆனால், இன்று கோவில்கள் இருந்த இடத்தில் கடைகள் உள்ளன,ஷாப்பிங் மால்கள் இருக்கின்றன. ஏற்கனவே நான் இது குறித்து சட்டமன்றத்தில் பேசும்போது கோவில்கள் இருந்த இடத்தில் கட்டிடங்கள் இருக்கிறதென்று ஜெயலலிதா ஒப்புக்கொண்டார்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசும்போது, “தமிழகத்தில் எட்டாயிரம் முதல் பத்தாயிரம் கோவில்கள் வரை காணவில்லை, அறநிலையத் துறை அந்தக் கோயில்கள் அனைத்தையும் காட்ட வேண்டும். இதனை மீட்பதற்குத் தனியாகக் குழு அமைத்திருப்பதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் கூறுகின்றார். கடை வைப்பதற்காகத் தனியார்களுக்குப் பட்டா மாற்றம் செய்த பட்டாக்களை நீக்கினாலே கோவில்களை மீட்க முடியுமே” என்று ஹெச்.ராஜா குறிப்பிட்டுளார்.
மேலும் பேசுகையில், “தமிழக அரசாங்கத்தின் நோக்கம் இந்துக் கோவில்களை மீட்பதல்ல, பாதுகாப்பதல்ல. ஆகவே நேற்றையை முன்தினம் நாங்கள் ‘இந்து ஆலய மீட்புக்குழு’ ஆரம்பித்துள்ளோம், கட்டிடங்களை அகற்றிவிட்டு இந்து அறநிலையத் துறை மீண்டும் கோயில்களைக் கட்டாவிட்டால் ‘இந்து அறநிலையத் துறையே கோயில்களை விட்டு வெளியேறு’ என்ற கோஷத்தை முன்வைப்போம். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ என்பது விபத்தா, சதியா என்பதைக் காவல் துறை விசாரிக்க வேண்டும்” என்று ஹெச்ரா.ஜா வலியுறுத்தியுள்ளார்.�,”