பொதுவாகவே, புரட்டாசி மாதம் இறைவழிபாட்டில் ஈடுபட உகந்த மாதம். ஆடி மாதம் அம்மனுக்கு என்றால், புரட்டாசி மாதம் பெருமாளுக்கு. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு, ‘தளியல்’ போடுவது வழக்கம். பெருமாளுக்குப் படைக்கப்படும் நைவேத்தியங்களில் சாத வகைகள் முக்கிய அங்கம் வகிக்கும். படையலுக்குச் செய்யப்படும் இந்த ஸ்வீட் கார்ன் மிளகு சாதம் அனைவரையும் கவரும். வீட்டிலேயே செய்து நீங்களும் சுவைக்கலாம்.
**என்ன தேவை?**
பாஸ்மதி அரிசி – ஒரு கப்
ஸ்வீட் கார்ன் முத்துகள் – ஒரு கப்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
பாஸ்மதி அரிசியை இரண்டு முறை நன்கு கழுவி, ஓர் அகலமான பாத்திரத்தில் சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி, 10 நிமிடங்கள் ஊறவைத்துக்கொள்ளவும். மற்றோர் அகலமான பாத்திரத்தில் ஐந்து கப் தண்ணீர் ஊற்றிச் சூடாக்கி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஊறவைத்து வடித்த அரிசி மற்றும் ஸ்வீட் கார்ன் முத்துகள் சேர்த்து நன்கு வேகவிடவும். அரிசி நன்றாக வெந்ததும் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். பின்னர் அகலமான பாத்திரத்தில் போட்டுச் சிறிது நேரம் ஆறவைக்கவும். வாணலியில் நெய்விட்டுச் சூடாக்கி, மிளகுத்தூளைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். இதனுடன் ஆறவைத்த சாதம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.
**குறிப்பு**
அரிசியை வடித்து வேகவைக்க நேரமில்லை என்றால் குக்கரில் ஊறவைத்த அரிசி, ஸ்வீட் கார்ன், ஒன்றரை கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ளவும்.
**சிறப்பு**
உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்ப குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய சுவையான ரைஸ் இது.
[நேற்றைய ரெசிப்பி: வெந்தய சாதம்](https://minnambalam.com/k/2019/09/22/1)�,