விளக்கேற்ற பயன்படும் எண்ணெய்யை சமையல் எண்ணெய் என்று விற்பதை தடுக்க ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அலங்காநல்லூரில் எம்.விக்கிரமங்கலத்தைச் சேர்ந்த சிதம்பரம் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், அலங்காநல்லூரில் தரமான நல்லெண்ணெய்யை விற்பதற்கு பதிலாக விளக்கேற்ற பயன்படும் கலப்பட எண்ணெய்யை சமையல் எண்ணெயாக விற்பனை செய்கின்றனர். இதுமட்டுமல்லாமல், சில நிறுவனங்களும் விளக்கேற்ற பயன்படும் எண்ணெய்யை நல்லெண்ணெய் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த கலப்பட எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட அரிசி மற்றும் தவிடில் இருந்து தயாரிக்கப்படுகிறது. சமையலுக்கு கலப்பட எண்ணெய்யை உகந்ததல்ல, அது உடலுக்கு பல தீங்குகளை விளைவிக்கும். தரமான நல்லெண்ணெய் எள்ளிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
ஆனால்,இது குறித்து உணவு கலப்பட தடுப்பு அலுவலர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், இந்தியாவில் தேங்காய் எண்ணெய்,நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றை தவிர மற்ற எண்ணெய்களில் கலப்படம் இருக்கிறது. அதனால், விளக்கேற்ற பயன்படும் கலப்பட எண்ணெயை நல்லெண்ணெய் என்று கூறி விற்பனை செய்வதை தடை விதிக்கவும், இந்த எண்ணெய் சமையலுக்கு நல்லதல்ல என குறிப்பிட வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், பி.கலையரசன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி.முத்துவேலன் வாதிட்டார். இதைத் தொடர்ந்து,மனுதாரரின் புகார் உண்மையாக இருந்தால் ஒரு மாதத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உணவு கலப்பட தடுப்பு பிரிவினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மதுரையில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கலப்பட எண்ணெய் தரமான எண்ணெய் என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.�,