பணப் பரிமாற்ற முறைகேட்டில் ஈடுபட்டு தமிழகச் சிறையில் அடைக்கப்பட்ட பரஸ்மால் லோதாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கிறது சென்னை சிபிஐ நீதிமன்றம். சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சென்னை தி.நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சேகர் ரெட்டியை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் சேகர் ரெட்டிக்கு உடந்தையாக இருந்ததாக கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் பரஸ்மால் லோதாவும் கைது செய்யப்பட்டார். அவர் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
போயஸ் கார்டனுக்கு நெருக்கமான, சென்னை தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் அவரது வீட்டில் இருந்து ரூ. 147 கோடியும், 178 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ரூ. 24 கோடிக்கு புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு, ஆடிட்டர் பிரேம்குமார் மற்றும் கூட்டாளிகளான திண்டுக்கல் சர்வேயர் ரத்தினம், முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சேகர் ரெட்டி தரப்பினர் மீது சென்னை சிபிஐ போலீஸார் பதிவு செய்துள்ள முதல் வழக்கில், 6வது குற்றவாளியாக கொல்கத்தா தொழிலதிபர் பரஸ்மால் லோதாவையும் சேர்த்துள்ளனர். சேகர் ரெட்டிக்கு, புதிய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரை, சென்னையில் வைத்து விசாரிக்கக்கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்ததையடுத்து, அதற்கு சிபிஐ நீதிமன்றம் அனுமதியளித்தது. மும்பை அமலாக்கத்துறையினர், பரஸ்மால் லோதாவை இன்று சென்னைக்கு கொண்டு வரப்பட்டு விசாரணைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், பரஸ்மால் லோதாவின் தாயார் மரணம் அடைந்தார். இதையடுத்து பரஸ்மால் லோதா, தன் தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ஜாமீன் வழங்கக்கோரி சென்னை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்ற சி.பி.ஐ. நீதிமன்றம், பரஸ்மால் லோதாவுக்கு 21 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. அத்துடன், தாயாரின் இறுதிச்சடங்குக்காக கொல்கத்தாவுக்குச் செல்லும் பரஸ்மால் லோதாவுடன் ஒரு சி.பி.ஐ. அதிகாரியும் செல்ல வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.�,