திமுக எம்.பி.கனிமொழி வெற்றிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கைத் தமிழக பாஜக முன்னாள் தலைவரும். தற்போதைய தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தரப்பில் வாபஸ் பெறுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட்டு, கனிமொழி வெற்றி பெற்றார். கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தான குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதுபோன்று கனிமொழிக்கு எதிராக தமிழிசை சவுந்தரராஜனும் மனுத் தாக்கல் செய்திருந்தார். அதில், ”கனிமொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளது, முறையற்ற வகையில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது இதுகுறித்து ஆட்சேபங்கள் தெரிவித்தபோது தூத்துக்குடி தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார்.
கனிமொழியின் கணவர் மற்றும் மகன் சிங்கப்பூர் குடிமகன்கள். அவர்கள் வருமான விவரங்கள் பொருந்தாது என்று வேட்புமனுவில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் கனிமொழி சிங்கப்பூர் அரசு வழங்கிய குடிமக்கள் சான்றிதழ்களை இணைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் இணைக்க வில்லை. அவருடைய வேட்பு மனு குறைபாடுடையது. எனவே அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.
இம்மனு செப்டம்பர் 5ஆம் தேதிக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கைச் செப்டம்பர் 23ஆம் தேதி விசாரிப்பதாகக் கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று (செப்டம்பர் 23) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கின் திருப்பமாக தமிழிசை சார்பில் கனிமொழிக்கு எதிரான மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டதால் இந்த வழக்கைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழிசையின் இந்த மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக உரிய நோட்டீஸை அரசிதழில் வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மனுவின் மீதான விசாரணை அக்டோபர் 14ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சந்தான குமார் தொடர்ந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
�,