தமிழகத்தில் கண்மாய், குளங்களில் வணிக ரீதியாக மீன் வளர்க்க மற்றும் ஏலம் விட இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை மாவட்டத்தில் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புக்கு எதிரான வழக்கில், ஏற்கெனவே மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நேற்று (அக்டோபர் 31) இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி, வாலிநோக்கம், கடலாடி போன்ற இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இப்பகுதியில் கண்மாய், குளங்களை ஏலம் எடுத்து மீன் வளர்க்கும் நடைமுறை இருந்து வருகிறது. இவ்வாறு மீன் பிடிப்பதற்காகக் குளத்து நீரை வீணாக வெளியேற்றிவிடுவதாகவும், தொழில் போட்டியால் குளத்தில் விஷம் கலப்பு, நீர் மாசு ஏற்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறப்பட்டது. இதனால் குளத்து நீர் மாசுபடுகிறது என்றும், இதைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
கண்மாய், குளங்களில் மீன் வளர்க்கவும், அவற்றை ஏலம் விடவும் இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.�,