இந்திய விமான நிறுவனங்களின் செயல்பாடுகளுக்காகவும், நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களிடம் கடனுதவி கோரப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துச் சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டியாலும், விமான எரிபொருள் விலையேற்றத்தாலும் விமான நிறுவனங்களின் வருவாய் குறைந்து நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விமானக் கட்டணங்களையும் குறைவாகவே வைத்திருப்பதால் கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விமான நிறுவனங்களுக்கு உதவும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களிடம் கடனுதவி கேட்டு அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய விமான நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பாக இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை அக்குழுவின் செய்தித் தொடர்பாளரான உஜ்வல் தே, *புளூம்பெர்க்* ஊடகத்திடம் பேசுகையில் உறுதிசெய்துள்ளார்.
இந்திய விமான நிறுவனங்கள் கூட்டமைப்பின் அங்கங்களாக உள்ள ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, கோ ஏர்லைன்ஸ் லிமிடெட், ஆகிய நிறுவனங்கள் இணைந்து 80 சதவிகித உள்நாட்டு சந்தைப் பங்கைக் கொண்டுள்ளன. இதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனமானது தனது ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கூடக் கொடுக்க முடியாமல் தவித்து வருகிறது. 2019 மார்ச் மாதம் நிறைவடையும் நிதியாண்டில் இந்திய விமான நிறுவனங்களுக்கு 1.9 பில்லியன் டாலர் வரையில் இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட 3 பில்லியன் டாலர் மூலதனம் தேவை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில்தான் அரசு தரப்பிலிருந்து விமான நிறுவனங்கள் உதவியை நாடியுள்ளன.�,