உதய் பாடகலிங்கம்
ஒரு ஜோடி அல்லது தம்பதிகள் இடையே உறவு சீராக இருப்பதற்குப் படுக்கையறை திருப்தி என்பது அளவுகோலா? நீண்டகாலமாக ஒரு தம்பதியிடையே உறவுப்பிணைப்பு பலமாக இருப்பதற்கு செக்ஸ் மட்டுமே காரணமாக அமைகிறதா? இது போன்று பல கேள்விகள், இன்றைய தலைமுறையின் மூளைக்கு நடுவே கண்ணுக்குத் தெரியாத கொம்புகளாக முளைத்து நீட்டிக் கொண்டிருக்கின்றன. செக்ஸ் குறித்த தேடலுக்கு வழிகாட்ட இணையம் உள்ளிட்ட எத்தனையோ வழிகள் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் இன்றைய சூழலில்தான், தாங்க முடியாத அளவுக்குப் பாலியல் வறட்சியும் சமூகத்தை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
ஆண்டுக்குச் சில முறை கோயில் கொடைகளையும், உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளையும், அவ்வப்போது கிடைக்கும் எதிர்பாராத விருந்துகளையும் சுவைத்துக் கொண்டிருந்தவர்கள் நாம். சைவமோ, அசைவமோ எந்தவகை உணவுப் பழக்கம் கொண்டவராக இருந்தாலும், இன்று தினம் தினம் விருந்து அவசியம் என்ற நிலை உண்டாகிவிட்டது. இந்த விஷயத்தில், பொருளாதாரக் குறைபாடு தவிர வேறு எந்த பாகுபாடும் குறுக்கே வராத நிலைமை உருவாகிவிட்டது.
**சிலாகிப்பு எங்கே போனது?**
தேடித் தேடி உண்ணுவது அதிகரித்துவிட்ட சூழலில் ருசியைச் சிலாகிப்பதும் அதன் சுவையை மனதில் தாங்குவதும் குறைந்துபோவது விநோதம்தான். நாளுக்கு ஒருவேளை பிரியாணி என்றாகிப்போன வாழ்வில், அந்த விஷயத்திலும் எதிர்பார்ப்பு அதீதமாகத் தானே இருக்க முடியும்? ஆனால், விளைவுகள் நேரெதிராக இருக்கிறது. 50, 100 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர்களைப் போல நாம் செக்ஸ் வாழ்க்கையைப் புசிக்கிறோமா என்ற கேள்விக்கு, ‘ஞே’வென்று முழிக்க வேண்டியிருக்கிறது. வேண்டுமானால், அந்த காலத்து அரிசி போல இப்போ எங்க சத்தான சாப்பாடு கிடைக்குது என்ற பேச்சுகளைக் கேட்கலாம். ஆனால், கண்டிப்பாக அவை இந்த கேள்விகளுக்கான பதில்கள் அல்ல.
உணவு உண்பவரிடம் உணவிடுபவர் திருப்தியாகச் சாப்பிட்டீர்களா என்று கேட்பது விருந்தோம்பல். ஆனால், செக்ஸில் ஈடுபடுபவர்களில் எத்தனை பேர் தம் இணையிடம் திருப்தி குறித்துப் பேசுகின்றனர். ஒருவேளை அதிருப்தி தென்பட்டால், அதைத் தீர்க்க உரையாடலை நிகழ்த்துகின்றனர். உறவு என்பது கொடுப்பதும் பெறுவதும் என்று வரையறுத்துக் கொண்டாடிய மண்ணில், சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் விழுந்த விக்டோரிய மனப்பான்மையைச் செழித்துத் தழைக்க வைத்தவர்களே இதற்கு எதிரான கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர்.
**முதலில் வருவது எது?**
கொடியசைந்ததும் காற்று வந்ததா கதையைப் போலவே, உறவுக்கும் செக்ஸுக்குமான தொடர்பை விளக்குவது கடினம். ஆனால், இரண்டும் தனியாக ஒருபோதும் மேம்படாது. உண்மையில், இவையிரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல. அமெரிக்காவின் பிளோரிடா மாகாணப் பல்கலைக்கழகம் சார்பில், புதிதாகத் திருமணம் ஆனவர்களிடையே சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், அதிக முறை செக்ஸ் கொள்வதற்கும் உறவு மேம்படுவதற்குமான தொடர்பிழை கண்டறியப்பட்டுள்ளது. இருவரும் செக்ஸ் உறவில் ஆனந்தம் பெறுகிறார்கள் எனும்போது, அந்த உறவில் திருப்தி நிலைத்திருப்பது தெரியவந்துள்ளது.
கோபமும் சண்டையும் நிகழ்ந்தபிறகு ஆக்ரோஷமாக செக்ஸ் வைத்துக்கொள்வது, கடமைக்கு உறவு கொள்வது, எந்தவித விளைவுகளுமற்ற செக்ஸை பேணுவது என்றிருக்கும் தம்பதியரில் சிலர் மனநல மருத்துவர்களை நாடுகின்றனர். அதேநேரத்தில் செக்ஸில் திருப்தியை உணரும் ஜோடிகள் இடையே தகவல் தொடர்பில் வெளிப்படைத்தன்மை உள்ளது. இருவருக்கிடையிலான உறவு தானாக ஒருங்கிணைகிறது. முடிவெடுக்கும் விஷயத்தில் இருவருக்கும் இடையே ஒற்றுமை ஓங்குகிறது. அவர்களது வாழ்வின் வளர்ச்சியைக் காமத்தின் மூலமாகக் கிடைக்கும் சக்தி தீர்மானிக்கிறது.
**காமத்தில் எண்ணிக்கை அவசியமா?**
அடிக்கடி செக்ஸ் கொள்வதன் மூலமாக ஜோடிகள் இடையே உறவுப் பிணைப்பு மேம்படுவது மட்டுமல்ல, நீண்டகாலமாக ஓர் உறவு வலுக்கவும் இதுவே காரணமாகிறது.
ஒரு ஆணும் பெண்ணும் செக்ஸ் கொள்வதால் ஏற்படும் திருப்தி சுமார் 48 மணி நேரம் மனதில் நீடிப்பதாகக் கூறுகிறது இந்த ஆய்வு. மிகத் திறம்வாய்ந்த உறவைப் பேணும் ஜோடிகள் பல மாதங்களுக்குப் பின்னும் அதே திருப்தியை உணர்வதாகத் தெரியவந்துள்ளது.
ஒருக்கொருவர் கொண்டிருக்கும் மதிப்பீடு, தோற்றம், இருவரும் சேர்ந்து பயணிப்பதில் இருக்கும் விருப்பங்கள், பயங்கள், எதிர்கால நோக்கங்கள் என்று பல விஷயங்கள் ஒருவரது செக்ஸ் வாழ்வில் திருப்தி நிரம்பக் காரணமாக அமைகின்றன.
**கண்டவுடன் செக்ஸ் வேண்டாம்!**
காதலில் திளைப்பது அல்லது சேர்ந்து வாழ்வது என்றிருக்கும் ஜோடிகளின் வாழ்வு தொடர்வதற்கும் செக்ஸ் திருப்தியே அடிப்படையாக அமைகிறது. ஆனால், இதுபோன்ற உறவுகள் முகிழ்க்கும்போது உடனடியாக செக்ஸ் உறவு கொள்ளக் கூடாது என்று கூறுகிறது அமெரிக்காவின் ப்ரிகாம் யங் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. 2010ஆம் ஆண்டு இந்த ஆய்வின் முடிவுகளைச் சமர்ப்பித்தனர் ஆய்வாளர் டீன் பக்ஸ்பி தலைமையிலான குழுவினர். டேட்டிங்கின் தொடக்கத்தில் அல்லது ஒரு மாதத்துக்குள்ளாக செக்ஸ் கொண்டவர்கள் இடையே உறவு மிக மோசமானதாக மாறுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
செக்ஸ் மற்றும் வாழ்க்கைத் தரம் இடையிலான தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட இக்குழுவானது, உறவு மேம்பட தம்பதிகள் இடையே சிறப்பாக செக்ஸ் வாழ்வு அமைய வேண்டுமென்று தெரிவித்தது. அது மட்டுமல்லாமல், பழகும்போது செக்ஸ் கொள்வதைத் தள்ளிப்போடும்போது இருவருக்கும் இடையிலான சமூக உறவு மேம்படுவதோடு ஒருவர் மீது மற்றொருவரின் ஈர்ப்பும் அதிகமாவதாகக் கூறியது. திருமணமாகும் வரை செக்ஸைத் தள்ளிப்போடும் ஜோடிகள் இடையே வாழ்க்கை அதீதப் பிணைப்புடன் இருப்பதாகத் தெரிவித்தது இக்குழு.
நம்மவர்கள் இடையே இந்த விஷயம் தானாகவே செயல்பாட்டில் இருந்து வந்திருக்கிறது. இருபாலரில் ஒருவருக்கு விருப்பம் இல்லையென்றாலும், மற்றொருவர் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்தப் புரிதல் இருக்கும்போது மற்றனைத்தும் தானாகக் கூடி வரும்.
**உணவின் பின்னிருக்கும் மோகதீபம்**
உணவு என்பது வெறும் உணவு மட்டுமல்ல; அது ஒருவரது மனதின் உணர்வு. அதனால்தான் ருசியான சாப்பாட்டை உண்டவுடன் அதைச் சமைத்த ஆணையோ, பெண்ணையோ மனதாரப் பாராட்டும் வழக்கம் நம் சமூகத்தில் உள்ளது. அவர்கள் நல்மனதைப் பெற்றவர்கள் என்ற பாராட்டு அதில் முதன்மையாகிறது. புதிதாகத் திருமணமான ஒரு பெண் அல்லது ஆண் தனது இணைக்குச் சமைத்துக்கொடுப்பது இன்றைய தலைமுறையிடமும் தொடர்ந்து வருகிறது. நல்ல உணவென்பது காமத்தின் ருசியை தன்னுள் மறைத்துக் கொண்டிருப்பதாகவே கருதப்படுகிறது.
நமக்குத் தெரிந்த நபர்கள் இடையே, நல்ல உறவுடன் திகழும் ஜோடிகளை மனக்கண்ணில் யோசித்துப் பாருங்கள். அவர்கள் இடையே உறவு நிலைத்திருக்க, உணவின் பின்னிருக்கும் நாட்டமும் முக்கியப் பங்கு வகிக்கும். இணையின் சமையல் ருசிக்கு இன்னொருவர் அடிமையாகி இருப்பார் அல்லது அதீத அன்பின் காரணமாக இணை தரும் எந்த உணவும் ருசியானதாகத் தோன்றும் சூழல் தொடரும். இதை உணர்ந்தே, நம் முன்னோர் வாழ்வில் உணவுக்கு முக்கியத்துவம் தந்துள்ளனர். அதாகப்பட்டது, உணவு சரியாக இருந்தால் பின்னதும் சீராக இருக்கும் என்ற எண்ணமே இதற்குக் காரணம்.
**உறவு மேம்பட…**
இருவருக்கிடையே உறவு மேம்பட்டதாக அமைய பயங்கரமான வெளிப்படைத்தன்மை பரஸ்பரம் இருக்க வேண்டும். இணையின் உணர்வுகள், விருப்பங்கள், ஆசைகள், வேறுபாடுகள், எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் மனதில் இருப்பதை தெரிவித்தல் என்று இருவரும் இருக்க வேண்டும். நல்லது மட்டுமல்ல; பாதிப்புகளும் பயங்களும் கூடப் பேசப்பட்டிருக்க வேண்டும்.
அதேபோல, தினசரி வாழ்வில் இருவருக்குமிடையே சமத்துவம் நிலவுவது அவசியம். அடிமையாவதோ, அடிமைப்படுத்துவதோ ஒருபோதும் பயன் தராது என்பதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்.
முதலிரண்டும் சரியாக அமைந்தாலே, நல்ல அதிர்வுகளைக் கட்டமைப்பது தானாக நிகழும். இதனால் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் நெருங்கிப் பிணையும் இருவருக்கும் இடையே ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கை கண்டிப்பாக அமையும். குழந்தைகள், வாழ்க்கை நெருக்கடிகள், உடல்நலக் குறைபாடுகள் இவற்றைத் தாண்டி இருவரும் படுக்கையறையில் ஒன்றாக இருக்கும் நேரத்தைத் திட்டமிட்டுக்கொண்டால் எல்லாம் சுமுகமாக இருக்கும். முக்கியமாக, படுக்கையறையில் சிரிப்பொலிகள் பரவும்; வீட்டில் தம்பதியர் இடையே பிணக்குகள் ஒருபோதும் பூதாகரமாகாது.
உறவும் செக்ஸும் பிரிக்க முடியாதது. அறிவியலின் உதவியோடு அதைக் கூறு போடுவதால், எந்தப் பயனும் விளையப் போவதில்லை. மாறாக, இன்றைய வளர்ச்சியின் போக்கு ஆறாகப் பெருகி நிறைக்கும்போது, அதில் பயணிக்க இரண்டையும் சாமர்த்தியமாகப் பயன்படுத்துவதே சிறந்தது. இந்த வித்தை தெரிந்தவர்கள், நாங்கள் சிறந்த ஜோடி என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதில்லை. அவர்களின் வாழ்வில் எந்த அன்னப் பறவையும் செக்ஸையும் உறவையும் தனித்தனியாகப் பிரிக்க முடியாது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: தினகரன் -அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ரகசிய சந்திப்பு!](https://minnambalam.com/k/2019/06/15/67)**
**[முதல்வரை வரவேற்காத பன்னீர்செல்வம் மகன்!](https://minnambalam.com/k/2019/06/15/43)**
**[குடிநீருக்கான பணம் குப்பைத்தொட்டிக்குப் போனது: துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/06/14/17)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
�,”