�
தேர்தலில் தம் கட்சிக்கு வாக்களித்தால், இலவச பொருட்கள் அளிப்போம் என அனைத்து அரசியல் கட்சிகளும் வாக்குறுதி கொடுப்பதற்கு தடை விதிப்பது குறித்து தேர்தல் ஆணையத்திடம் இருந்தும் மத்திய அரசிடம் இருந்தும் பதில் கேட்டிருக்கிறது டில்லி உயர் நீதி மன்றம்.
“நீங்கள் (தேர்தல் ஆணையம்), உங்களுடைய வரைமுறைகள், உச்ச நீதிமன்றத்தின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பது குறித்து பதில் அறிக்கை அளித்து இந்த நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும்” என தலைமை நீதிபதி ஜி ரோஹினி மற்றும் நீதிபதி சங்கீதா திங்கர செஹ்கலின் அமர்வு தெரிவித்திருக்கிறது.
இது குறித்து மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் நோட்டீஸ் ஒன்றும் அனுப்பியிருக்கிறது நீதிமன்றம். எட்டு வார காலத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மே 24 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. உத்திர பிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல்கள் தொடங்கவிருக்கும் நிலையில், இலவசங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என மனு விண்ணப்பித்திருப்பது டில்லியைச் சேர்ந்த அசோக் ஷர்மா.
�,