தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மாநிலங்கள் தங்களது நிதிப் பற்றாக்குறை இலக்கை அடையத் தவறியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மாநில அரசுகளின் பட்ஜெட் விவரங்களைக் கொண்டு அம்மாநிலங்களின் நிதிப் பற்றாக்குறை விவரங்களை ரிசர்வ் வங்கி தனது ஆய்வில் வெளியிட்டுள்ளது. ஊதியங்களுக்கான செலவு அதிகரிப்பு, விவசாயக் கடன் தள்ளுபடி, ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் வருவாய் குறைவு போன்ற காரணங்களால் இந்த ஆண்டில் மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது. மாநில அரசிடமிருந்து அதிக நிதிப் பகிர்வு எதிர்பார்ப்பு இருந்தபோதிலும் நிதிப்பற்றாக்குறை இலக்கு 0.35 சதவிகிதக் குறைபாட்டுடன் 3.1 சதவிகிதமாக உள்ளது. 2017-18 நிதியாண்டில் மாநிலங்கள் 0.4 சதவிகித வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள நிலையில், 2018-19 நிதியாண்டில் 0.2 சதவிகிதம் கூடுதல் வருவாய் பெறுவதற்கான நம்பிக்கை உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுகிறது.
மாநில அரசுகளின் மொத்த வருவாய் குறைபாட்டில் விவசாயக் கடன் தள்ளுபடி மட்டும் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது. மொத்த செலவினத்தில் (0.13%), விவசாயக் கடன் தள்ளுபடியின் பங்கு 0.05 சதவிகிதமாக உள்ளதாகக் கூறும் ரிசர்வ் வங்கி, மாநில அரசுகள் தங்களது உற்பத்தி அளவு உயர்ந்து வருவதை நிரூபிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. மாநில அரசுகளின் செலவுகள் அதிகரித்து வருவதற்கு விவசாயக் கடன் தள்ளுபடி முக்கியக் காரணமாக உள்ளது. ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா தொடங்கி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் வரிசையில் இப்போது கர்நாடகா என மாநில அரசுகள் தொடர்ந்து கடன் தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.
2017-18 நிதியாண்டின் பட்ஜெட் மதிப்பீட்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.27 சதவிகிதம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், நிதிப் பற்றாக்குறையின் அளவு 0.32 சதவிகிதமாக உயர்ந்திருந்தது.�,