இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உலோகக் குழாய்களுக்கு அமெரிக்க அரசு குவிப்புக்கு எதிரான வரியை விதித்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்ற பிறகிலிருந்தே உலக நாடுகளுடன் வர்த்தகப் போர் மூளும் அளவுக்குப் பல்வேறு நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் மீது தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை அவர் விதித்து வருகிறார். அந்த வகையில், இந்தியா, சீனா மற்றும் நான்கு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உலோகக் குழாய்களுக்கு குவிப்பு வரியை அமெரிக்க அரசு விதித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்கவும், மேற்கூறிய நாடுகளுடனான தனது வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவுமே இவ்வாறு வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அரசு காரணம் கூறுகிறது.
இதன்படி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உலோகக் குழாய்களுக்கு 50.55 சதவிகிதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டில் இந்தியாவிலிருந்து மொத்தம் 294.7 மில்லியன் டாலர் மதிப்பிலான உலோகக் குழாய்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போதைய கட்டுப்பாட்டால் இந்த ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. சீனாவுக்கு 132.63 சதவிகித வரியும், கிரீஸ் நாட்டுக்கு ரூ.22.51 சதவிகித வரியும், கனடாவுக்கு 24.38 சதவிகித வரியும், தென் கொரியாவுக்கு 22.21 சதவிகித வரியும், துருக்கி நாட்டுக்கு 5.29 சதவிகித வரியும் அமெரிக்க அரசால் விதிக்கப்பட்டுள்ளது.�,