புதுச்சேரி சட்டப் பேரவையில் நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியபோது, மரபுப்படி வழக்கமாக இடம்பெற வேண்டிய ஆளுநர் உரை இடம்பெறவில்லை.
கடந்த 2016 மே மாதம் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக கூட்டணி வென்று முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு பதவியேற்றது. பேரவைத் தலைவராக வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவை கூடியது. பின்னர், முழுமையான பட்ஜெக் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி 20ஆம் தேதி ரூ.6665 கோடிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்பின்னர் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், 6 மாதங்களுக்குள் சட்டப் பேரவையை மீண்டும் கூட்ட வேண்டும். சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்களுக்கான தலைவர்களும் உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.
ஜனவரி 24ஆம் தேதி சட்டப்பேரவை கூடும் என அதன் செயலாளர் வின்சென்ட் ராயர் அறிவித்தார். அதன்படி, இன்று காலை 11 மணிக்கு பேரவை கூடியது. பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம் தலைமையில் திருக்குறளை வாசிக்கப்பட்டது. பின்னர், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, புதுவை சட்டப்பேரவை முன்னாள் தலைவர் விஎம்சி.சிவக்குமார், பேரவை துணைத் தலைவர் ஏவி.ஸ்ரீதரன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானங்களை முதல்வர் நாராயணசாமி வாசித்தார். அப்போது அவர் பேசியதாவது: ‘தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா 6 முறை தமிழக முதல்வராகவும், 2 முறை எதிர்கட்சித் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் திறம்பட பணிபுரிந்தார். இந்தியாவில் நீண்டகாலம் முதல்வர் பதவி வகித்தவர்களில் அவர் 2வது இடத்தைப் பெற்றவர். அவரது மறைவு தமிழகத்துக்கும் அவரது கட்சித் தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும்.
முன்னாள் ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா, புதுச்சேரி முன்னாள் சட்டப்பேரவை தலைவர் விஎம்சி.சிவக்குமார், புதுவை பேரவை முன்னாள் துணைத்தலைவர் ஏவி.ஸ்ரீதரன் ஆகியோரது மறைவும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்றார்.
ஆளுநர் உரை:
நிகழாண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபின்படி உரை இடம்பெற வேண்டும். ஆனால் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரை எதுவும் இடம்பெறவில்லை.
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை இடம்பெறாது என முதல்வர் நாராயணசாமி சூசகமாக தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பேரவைக் கூட்டத் தொடரில் உரையாற்ற வாய்ப்புத் தர வேண்டும் என ஆளுநர் கிரண்பேடியே கூறியிருந்த நிலையில், அவருக்கு உரை நிகழ்த்த வாய்ப்பு தரப்படவில்லை. ஏற்கெனவே, கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் கிரண்பேடி உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.�,