xஆதரவு தெரிவித்த தேமுதிக, முடிவெடுக்காத பாஜக!

Published On:

| By Balaji

இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பதாக தேமுதிக அறிவித்துள்ளது.

இடைத் தேர்தல் நடைபெறவுள்ள நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பாக நாராயணனும், விக்கிரவாண்டி தொகுதியில் முத்தமிழ்ச்செல்வனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு முழுமையாகப் பணியாற்றுவோம் என கூட்டணிக் கட்சிகளான பாமக, தமாகா ஆகியவை உடனே அறிவித்துவிட்டன. ஆனால் தேமுதிக, பாஜக ஆகியவை தங்களது நிலைப்பாட்டைத் தெரிவிக்காமல் இருந்துவந்தன.

இதனையடுத்து சென்னை சாலிகிராமத்திலுள்ள விஜயகாந்த் இல்லத்தில் அவரை கடந்த 25ஆம் தேதி திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, ஜெயக்குமார் ஆகிய அமைச்சர்கள் நேரில் சந்தித்து இடைத் தேர்தலுக்கு ஆதரவு கோரினர். இதுதொடர்பாக விஜயகாந்திடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் போனில் பேசியிருந்தார். இந்த நிலையில் ஆதரவு கோரிய மூன்று நாட்களுக்குப் பிறகு இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றுவோம் என தேமுதிக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று (செப்டம்பர் 28) வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெற இருக்கும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவைத் தெரிவிக்கிறது. நாங்குநேரி, விக்கிரவாண்டி என இரண்டு சட்டமன்றத் தொகுதிகளிலும் தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும், வேட்பாளர்களின் வெற்றிக்குப் பணியாற்ற வேண்டும். கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனுத் தாக்கல் நாளையுடன் முடிவடையவுள்ள சூழலில், இதுவரை பாஜக தரப்பிலிருந்து அதிமுகவுக்கு ஆதரவு என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. இதுதொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “அதிமுக இன்றுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் உள்ளது. இடைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வது குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என்று தெரிவித்துள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share