Xஅரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

Published On:

| By Balaji

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா தொடர்ந்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு இன்று (பிப்ரவரி 2) மாற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பீட்டா வழக்கு தொடர்ந்தது. 2014ஆம் ஆண்டு மே 7ஆம் தேதி வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஜல்லிக்கட்டுக்குத் தடைவிதித்து உத்தரவிட்டது. 2016 நவம்பர் 16 ஆம் தேதி, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், மத்திய அரசின் மிருகவதை தடை சட்டம் இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு அமைந்துள்ளது. ஜல்லிக்கட்டு அனுமதிக்கக் கூடியது அல்ல என தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

அதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்போர், மாடு பிடி வீரர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர சட்டம் இயற்றக்கோரி 2017 ஜனவரி 16 முதல் 23 வரை மெரினாவில் லட்சக்கணக்கானவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு இறுதியாக வெற்றி கிடைத்தது.

ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருக வதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு கடந்த ஜனவரி 21ஆம் தேதி அவசர சட்டம் பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து ஜனவரி 23ஆம் தேதி நடைபெற்ற சட்டசபை சிறப்புக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் தமிழ்நாட்டின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற வழிவகை செய்தது. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

ஜல்லிக்கட்டுப் போட்டியை நிரந்தரமாக நடத்துவதற்குத் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக பீட்டா அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில், “தமிழகத்தில் அவனியாபுரம், பாலமேடு, திருநல்லூர், மறவப்பட்டியில் உள்ளிட்ட ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற 5 இடங்களில் காளை மாடுகள் கொடூரமாக நடத்தப்பட்டுள்ளது. எந்தவித மருத்துவ உதவியும் மாடுகளுக்கு வழங்கப்படவில்லை. மாடுகள் வால்கள் முறுக்கப்பட்டு அவை முறிந்துள்ளன. மூக்கணாங்கயிறு மிகவும் இறுக்கமாக இருந்ததால் அவற்றை இழுக்கும்போது ரத்தம் வந்தது. இதனால், விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது, சில நேரங்களில் மனிதர்களும் இறக்கின்றனர். 2017 ஜல்லிக்கட்டுச் சட்டம் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட 5 சுதந்திரங்களை மீறியுள்ளது” எனத் தெரிவித்திருந்தது. மேலும், அதற்கான வீடியோ மற்றும் புகைப்படங்களை தனது மனுவுடன் இணைத்திருந்தது.

இந்த மனுமீதான விசாரணை 2017 நவம்பர் 6ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள்,” இந்த மனு தொடர்பாக தமிழக அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கவேண்டும்” என உத்தரவிட்டனர். இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என கடந்த வார விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், 2 நீதிபதிகள் விசாரித்து வந்த ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கை, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு கலாச்சாரம் தொடர்புடையதா என்பது குறித்து நீதிபதிகள் விசாரணை நடத்தி இறுதி தீர்ப்பு அளிப்பார்கள்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel