Xஅரசாங்கமா அல்லது சொந்த நிறுவனமா?

Published On:

| By Balaji

அரசின் டெண்டர்களை ஆட்சியாளர்கள் தங்கள் உறவினர்களுக்கு கொடுப்பதாக குற்றம் சாட்டியுள்ள தினகரன், இது அரசாங்கமா அல்லது ஆட்சியாளர்களின் சொந்த நிறுவனமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக அரசுக்கு முட்டை மற்றும் சத்துமாவு சப்ளை செய்து வந்த கிறிஸ்டி ஃபிரைடுகிராம் என்ற நிறுவனத்தில் கடந்த சில நாள்களாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அந்நிறுவனம் ரூ.1,350 கோடி அளவிற்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாகத் தகவல் வெளியாகியது.

சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூலை 12) செய்தியாளர்களிடம் பேசிய அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன், “நிறைய இடங்களுக்கு அந்நிறுவனம் சத்துமாவு விநியோகித்து வந்துள்ளது. சத்துமாவின் தரமும் குறைந்ததாகவே இருந்துள்ளது. ஒரே நிறுவனத்திற்கு விநியோகிக்கும் உரிமையை தொடர்ந்து கொடுக்க வேண்டிய அவசியம் என்ன. தற்போது முட்டை முறைகேடு வெளிவந்துள்ளது. இதன்பின் ஒவ்வொன்றாக வெளிவரும். தன்னுடைய சுயலாபத்துக்காக டெண்டர் வேலைகளை தனது சம்பந்திக்கும் உறவினர்களுக்கும் முதல்வர் கொடுக்கிறார் . இது அரசாங்கமா அல்லது சொந்த நிறுவனமா?” என்று அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். தகுதி நீக்க வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும், அதன்பின்னர் ஜெயலலிதா ஆட்சி அமையும். அப்போது இவர்களின் ஊழல் ஒட்டுமொத்தமாக வெளிவரும் என்றும் குறிப்பிட்டார்.

“ பசுமை வழிச் சாலை என்கிற பெயரில் பசுமை அழிப்பு சாலைகளை கொண்டு வருகிறது இந்த அரசு. மக்களையும் சுற்றுச் சூழலையும் பாதிக்காத திட்டங்களை அரசுகள் வருங்காலத்தில் கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டின் நலன்களை பாதிக்காத தமிழக நலன்களில் அக்கறை கொண்ட ஒரு அரசு நிச்சயம் மத்தியில் அமையும். காவல் துறையை வைத்து அரசு நிலங்களைப் பிடுங்கினாலும் அடுத்த ஆட்சியில் இந்த திட்டம் நிறுத்தப்படுவது உறுதி” என்று தெரிவித்த தினகரன், ”அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் நாங்கள் 25 தொகுதிகளில் நிற்போம். 2014இல் 37 தொகுதிகளில் வெற்றிபெற்றதுபோல கூட்டணியுடன் இணைந்து 2019இலும் வெற்றி பெறுவோம். மத்தியில் யார் ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாக அமமுக இருக்கும்” என்றும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தை சொந்த நிறுவனமாக கருதுகிறார்கள் என்ற தினகரனின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “இது அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலையடுத்து அங்கு வருமான வரி சோதனைதான் நடைபெறுகிறது. இதனை அவர் புரிந்துகொள்ள வேண்டும். இதில் எந்த இடத்திலும் முட்டை கொள்முதலில் முறைகேடு என்று வருமான வரித்துறை கூறவில்லை. இந்த விவகாரம் திசை திருப்பப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

”அரசு ஒப்பந்ததாரராக இருப்பவர் வெளி இடங்களிலும் தொழில் செய்யும் நபராக இருக்கலாம். முட்டை மற்றும் வேறு விதமான பொருட்களைக் கூட அவர் விநியோகம் செய்யலாம். எனவே அதற்கும் முட்டை கொள்முதலுக்கும் எவ்வாறு சம்பந்தப்படுத்த முடியும். வரி ஏய்ப்பு நடைபெற்றதா இல்லையா என்பதுதான் கேள்வி. அது தொடர்பாகத்தான் வருமான வரித்துறை விசாரணை நடக்கிறது. இவர்கள் ஏன் துடிக்கிறார்கள்? முட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு தமிழக அரசின் மீது களங்கம் கற்பிக்கலாம் என்று நினைக்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share