அம்மா குடிநீர் விற்பனை தொடர்பான தகவல்கள் மிகவும் இரகசியமானவை என்று கூறி அதனைப் பற்றி தெரிவிக்கத் தமிழக அரசு மறுத்துள்ளது.
அம்மா குடிநீர் திட்டம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மூலம் கடந்த 2013ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. குறைந்தவிலையில் தரமான தண்ணீரை வழங்கவேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, ரூ. 10க்கு ஒரு லிட்டர் குடிநீர் அடங்கிய பாட்டில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் மூலம் அம்மா குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 307 விற்பனை நிலையங்களில் அம்மா குடிநீர் விற்கப்பட்டு வருகிறது. சென்னையில் 37 விற்பனையகங்கள் உள்ளன. அம்மா குடிநீர் உற்பத்தி ஆலை கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம், அம்மா குடிநீர் குறித்த தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருந்தது. அதில், கடந்த 2014ம் ஆண்டு முதல் அம்மா குடிநீர் பாட்டில்களின் விற்பனை விவரம் மற்றும் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்று கேட்டிருந்தது.
ஆனால், இதற்குப் பதிலளிக்க முடியாது என்று மாநில விரைவு போக்குவரத்து கழகத்தின் பொது தகவல் அதிகாரி தெரிவித்துள்ளார். 2005ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 1டியை அவர் மேற்கோள் காட்டியுள்ளார். அப்பிரிவில், வாணிக நம்பகத் தன்மை, வியாபார இரகசியங்கள், அறிவு சார் சொத்துடைமை இவை வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினரின் சந்தைப் போட்டிக்குக் குந்தகம் விளைவிக்கும் தகவல்கள். இத்தகவல்கள் பெரும்பான்மை மக்களுக்கு இன்றியமையாதது என்று தகுதிவாய்ந்த அதிகார அமைப்பு மனநிறைவு அடைந்தாலன்றி அத்தகவல்களை வெளியிடக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
இச்சட்டப் பிரிவை தமிழக அரசு தனது பாதுகாப்புக்குப் பயன்படுத்தியதற்கு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையத்தின் முன்னாள் தகவல் ஆணையரும் சமூக ஆர்வலருமான சைலாஷ் காந்தி கூறுகையில், அம்மா குடிநீர் என்பது சமூக பொதுநல திட்டமாகும். அப்படி இருக்கும்போது இது தொடர்பான தகவலைத் தெரிவிப்பது மூலம் என்ன வியாபார போட்டி ஏற்பட்டுவிடப் போகிறது.
பொதுத்துறையின் கீழ் உள்ள இந்திய வங்கி, ஏர் இந்தியா போன்ற நிறுவனங்கள் இந்தக் காரணத்தை கூறலாம். ஏனெனில் அவர்கள் போட்டி நிறைந்த சந்தையில் உள்ளனர். ஆனால் அம்மா குடிநீர் என்பது அப்படிபட்டதல்ல. மேலும், தனியார் நிறுவனங்கள் கூட தகவல்களைத் தருகின்றன என்று தெரிவித்தார். அதேவேளையில், அம்மா குடிநீர் திட்டத்திற்கு குறைந்த அளவிலே ஆதரவு உள்ளதாகவும், கடும் சவால்களுக்கு இடையே தங்களது விற்பனை இலக்கை அவர்கள் சந்தித்து வருவதாகக் கூறப்படுகிறது.�,