அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தரப்பிலிருந்து தேர்தல் ஆணையச் செயலாளரிடம் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி அளிக்கப்பட்ட மனுவில், “அம்மா முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியை நாங்கள் 19.04.2019 அன்று தொடங்கினோம். எங்களது கோரிக்கையை ஏற்று கட்சியாக அங்கீகரிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்து செப்டம்பர் 22 ஆம் தேதியோடு ஐந்து மாதங்கள் முடிந்து ஆறாவது மாதம் ஆரம்பித்து விட்ட நிலையில், ‘அமமுகவை ஏன் இன்னும் பதிவு செய்வதில் தாமதம் ?” என்ற கேள்வி அக்கட்சி நிர்வாகிகளிடையே எதிரொலித்து வருகிறது.
கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டு வெளியே வந்த தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “யாரேனும் கட்சி ஆரம்பிப்பதை எதிர்க்கிறார்களா என்பதற்கான கடைசி தேதி இன்றோடு முடிவடைகிறது. விரைவில் கட்சி பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே கடந்தவாரம் கும்பகோணத்துக்கு சென்றிருந்த டிடிவி தினகரன், அங்கே அமமுக நிர்வாகிகள் ரங்கசாமி, காமராஜ், வழக்கறிஞர் கார்த்திக், குடவாசல் இராஜேந்திரன் போன்றவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, “நமது கட்சி இன்னும் இரண்டு மாதத்தில் பதிவாகிவிடும். அதற்கான வேலைகள் சட்டப்படி நடந்து வருகிறது. தமிழகம் முழுவதும் உறுப்பினர்களை சேர்ப்பதைவிட முதலில் 234 சட்ட மன்றத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு பூத்துக்கும் முக்கியமான, நம்பிக்கையான ஒருவர் பெயரைக் கொடுங்கள். பிறகு அவர்கள் மூலமாக பூத் கமிட்டிக்கான ஆட்களை தேர்வுசெய்துகொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
தினகரன் உத்தரவை ஏற்று, தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத்துக்கும் ஒரு ஒருங்கிணைப்பாளர் பெயர், வாக்காளர் எண், ஆதார் எண், கைப்பேசி எண் மற்றும் முழுமையான முகவரியுடன் அமமுக தலைமைக்கு அனுப்பி வருகிறார்கள்.
உறுப்பினர்கள் சேர்க்காமல், கிளை, ஒன்றியம், நகரம் கமிட்டி அமைக்காமல் , பூத் கமிட்டிகள் கூட அமைக்காமல், டாப் கியரில் பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர் பெயர் பட்டியல் மட்டும் ஏன் அவசரமாகக் கேட்கிறார் என்பதுதான் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகம்.
இதுபற்றி அமமுக முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் தனித்தனியாக பேசினோம். அவர்கள் தெரிவித்த கருத்துகளை ஒருங்கிணைத்துத் தருகிறோம்.
“நாங்களே சின்னம்மா எப்போது வெளியில் வருவாங்க என்றுதான் காத்திருக்கிறோம். தினகரனின் அரசியல் நடவடிக்கைகள் கொஞ்சமும் பிடிக்கவில்லை. கட்சியில் உள்ள நிர்வாகிகள் அதிருப்தியில் வெளியேறுகிறார்கள். அவர்களிடம் ஏன் வெளியில் செல்கிறீர்கள் என்ன காரணம் என்று கேட்க மாட்டேன்கிறார். போனால் போகட்டுமே என்று கூலாக பேசுகிறார்.
ஜெயலலிதாவைப் போல இருக்கலாம் என்று நினைக்கிறார். அம்மா போகும் இடங்களில் மக்கள் பூரணம் கும்பம் வைத்திருந்தால் இறங்கித் தொட்டு கும்பிட்டுட்டு காரில் ஏறிச் செல்வார். கடைசிக் காலத்தில்தான் உடம்பு முடியாமல் காரில் இருந்தபடியே கும்ப மரியாதையைப் பெற்றுக்கொண்டு சென்றார். ஆனால் தினகரன் அப்படியில்லை. மக்கள் கூட்டமாகக் கூடிநின்று பூரணகும்பம் வைத்துகொண்டு நிற்பார்கள். அவர்களிடம் காரில் உட்காந்துக்கொண்டே தொட்டுப்பார்த்துட்டு பார்த்துக்கொண்டே போகிறார். இதையெல்லாம் கட்சிக்காரனால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
கட்சி நிர்வாகிகள் முதல் யாரையும் பட்டப் பெயர் வைத்தே கூப்பிடுகிறார். முதல்வர் எடப்பாடியைத் தார் ஊத்தறவர் என்றும், வேலுமணியை குப்பைக் கூட்றவர் என்றும், உணவுத்துறை அமைச்சர் காமராஜை சாம்பார் வாளி என்றும் இப்படி அனைவருக்கும் ஒரு பட்டப்பெயர் வைத்துச் சொல்லுவது கிண்டலடிப்பதைப் பல நிர்வாகிகள் ரசிக்கவில்லை.
சமீபகால நகர்வுகளைப் பார்க்கும்போது அதிமுகவும் அமமுகவும் இணையப் போகிறது என்று நாங்கள் அழுத்தமான நம்பிக்கையுடன் இருக்கும் நிலையில், கட்சியை விரைவில் பதிவு செய்வதாகச் சொல்கிறார். கடந்த ஆறு மாதம் முன்பே சொன்னார் கட்சியைப் பதிவுசெய்வதற்கு டெல்லிக்குச் சென்றுள்ளார்கள் என்று. இப்போது இன்னும் இரண்டு மாதத்தில் கட்சி பதிவுசெய்துவிடுவோம் என்கிறார். அதற்குள் சிறையில் உள்ள சசிகலா வெளியில் வந்துவிடுவார். அதுவரை கட்சியைப் பதிவுசெய்யவேண்டாம் என்பதுதான் சசிகலாவின் ஆலோசனை.
அதை மீற முடியாமல்தான் புதிய உறுப்பினர்களைச் சேருங்கள், பூத் கமிட்டிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் கொடுங்கள் என்று கட்சி நிர்வாகிகள் சோர்ந்து போய்விடாமல் இருக்க வேலை வாங்கி வருகிறார். அதே சமயத்தில் தனி ரூட் எடுக்கவும் ஆலோசித்துவருகிறார் தினகரன்” என்கிறார்கள்.
�,