ஜான் ஆலன் சாவ் என்ற 27 வயது அமெரிக்கச் சுற்றுலாப் பயணி அந்தமானில் உள்ள சென்டினல் தீவில் கொல்லப்பட்ட வழக்கில், அங்கு அவரை அழைத்துச் சென்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை விடுவிக்குமாறு, சாவ் குடும்பத்தினர் சமூக வலைதளமொன்றில் கடிதம் எழுதியுள்ளனர்.
அமெரிக்கா நாட்டிலுள்ள அலாஸ்கா பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஆலவ் சாவ். சில நாட்களுக்கு முன்பாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்குச் சுற்றுலா வந்தார். 27 வயதான இவர், கிறிஸ்தவ மிஷனரியின் சார்பாகப் பணியாற்றியவர். சாகசப் பயணங்களில் ஆர்வம் உடையவர். கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று, இவர் அந்தமான் பகுதியிலுள்ள சென்டினல் தீவுக்குச் செல்ல விரும்பினார். இங்கு சென்டினலிஸ் என்ற பழங்குடியின மக்கள் நூற்றுக்கும் குறைவான எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். வெளியுலகத்தோடு தொடர்பில்லாமல் வாழும் இச்சமூக மக்கள், நவீன வசதிகள் அண்டாமல் தங்களது வாழ்க்கையைத் தொடர்ந்து வருகின்றனர். அந்நியர்கள் அத்தீவுக்கு வந்தால் கொன்றுவிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு, சென்டினல் தீவுக்குச் சென்ற 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இத்தீவுக்கு யாரும் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நவம்பர் 17ஆம் தேதியன்று ஜான் ஆலன் சாவ் வடக்கு சென்டினல் தீவுக்குச் செல்ல சிலர் உதவி செய்தனர். அங்கு சென்ற ஜான் ஆலன் மர்மமான முறையில் கொல்லப்பட்டார். உடலில் அம்பு தைத்ததால், அவர் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஜான் ஆலன் அங்கு செல்வதற்கு உதவிய 7 மீனவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்துள்ளார் அங்குள்ள காவல் துறை அதிகாரியான விஜய் சிங்.
அத்தீவுக்குச் செல்வதற்காக, ஜான் ஆலன் அந்த மீனவர்களிடம் 25,000 ரூபாய் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மீன் பிடிப்பது போல, வடக்கு சென்டினல் தீவு அருகே மீனவர்கள் சென்ற படகு நின்றுள்ளது. அடுத்த நாள், கையில் பைபிளை எடுத்துக்கொண்டு அத்தீவுக்குச் சென்றுள்ளார் சாவ். அதற்கடுத்த நாள், அப்பகுதி அருகே சென்றபோது சென்டினலிஸ் பழங்குடியினர் ஒருவரது உடலை மண்ணில் புதைப்பதைப் பார்த்துள்ளனர் அந்த மீனவர்கள். இதன்பிறகே, அவர் கொல்லப்பட்டது வெளியுலகத்துக்குத் தெரிய வந்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க ஊடகங்களில் பேசிய ஜான் ஆலனின் தாயார் லிண்டா ஆடம்ஸ், இப்போதும் அவர் உயிரோடிருப்பதாகத் தான் நம்புவதாகத் தெரிவித்தார். மரணிப்பதற்கு முன்பு, தான் பயணித்த படகில் தனது குடும்பத்தினருக்கு ஒரு செய்தியை விட்டுச் சென்றுள்ளார். அதில், அந்த பழங்குடியின மக்களுக்காக இயேசு இருக்கிறார் என்று சொல்வதற்காகச் செல்வதாகத் தெரிவித்துள்ளார் ஜான் ஆலன்.
இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று (நவம்பர் 21) இன்ஸ்டகிராமில் ஜான் ஆலன் சாவ் குடும்பத்தினர் கடிதமொன்றை வெளியிட்டுள்ளனர். “உறுதி செய்யப்படாத தகவல்களின் மூலமாக, ஜான் ஆலன் சாவ் இந்தியாவில் கொல்லப்பட்டதாக அறிகிறோம். அந்தமான் தீவில் உள்ள சென்டினலிஸ பழங்குடிகள் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அவர் கொல்லப்பட்ட தகவலைக் கேள்விப்பட்டவுடன் ஏற்பட்ட உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. நல்ல மகனாக, சகோதரனாக, உறவினராக, சிறந்த நண்பராக இருந்தவர் ஜான் ஆலன்.
கிறிஸ்தவ மிஷனரியாக, சாகசப் பயணங்களில் ஆர்வமுடையவராக, சர்வதேசக் கால்பந்து பயிற்சியாளராக, மலை ஏறுபவராக விளங்கியவர் ஆலன். கடவுளை மிகவும் விரும்பியவர். மக்களுக்கு உதவுவதில் ஆர்வம் கொண்டவர். சென்டினலிஸ மக்களிடமும் அவர் அன்பைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கவில்லை. அவரது மரணத்துக்குக் காரணமானவர்களை மன்னிக்கிறோம். அந்தமான் தீவுகளில் கைது செய்யப்பட்ட அவரது நண்பர்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். அவரது சொந்த முயற்சியின் பேரிலேயே அங்கு சென்றார் என்பதால், அந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள் அவரது செயலுக்காகத் தண்டிக்கப்பட வேண்டாம்” என்று அந்த கடிதத்தில் சாவ் குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
சென்டினலிஸ பழங்குடிகள் பற்றி அறிந்தும் ஜான் ஆலனுக்கு உதவியது மிகப்பெரிய தவறு என்று கருத்து தெரிவித்துள்ளது அந்தமான் காவல் துறை.�,