தந்தை யார்: 27 ஆண்டுகளுக்கு முன் கற்பழித்த இருவர் மீது புகார்!

Published On:

| By Balaji

தனது தந்தை யார் என மகன் கேட்டதால் உத்தரப் பிரதேசத்தில் 27 ஆண்டுகளுக்கு முன் கற்பழித்த இருவர் மீது பெண் ஒருவர் தற்போது புகார் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் உதம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 1994ஆம் ஆண்டு தனது 12ஆம் வயதில் தன் அக்கா மற்றும் அவர் கணவருடன் ஷாஜகான்பூரில் வசித்து வந்தார். ஒருநாள் அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அண்டை வீட்டை சேர்ந்த நாகி ஹசன் என்பவர் சிறுமியைக் கற்பழித்தார். பின்னர் நாகி ஹசனின் தம்பியான குத்துவும் சிறுமியைக் கற்பழித்தார்.

அத்துடன் நில்லாமல் இருவரும் பல முறை சிறுமியிடம் தங்கள் காம இச்சையைத் தணித்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமானார். அதில் அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதை சிறுமியின் சொந்த ஊரான உதம்பூரில் உள்ள ஒருவருக்குக் கொடுத்து விட்டனர்.

பின்னர் சிறுமியின் அக்கா கணவருக்கு பணி மாறுதல் கிடைத்ததால் அவர்கள் ராம்பூருக்கு சென்று விட்டனர். சில ஆண்டுகளில் அந்தப் பெண்ணை காஜிப்பூரில் உள்ள ஒருவருக்கு அவருடைய அக்கா கணவர் திருமணம் செய்து கொடுத்து விட்டார். ஆனால், ஏற்கனவே அவர் கற்பழிக்கப்பட்ட தகவலை அறிந்து, 10 ஆண்டுகளுக்கு பின் அந்தப் பெண்ணை கணவர் விவாகரத்து செய்து விட்டார். எனவே அவர் தனது சொந்த ஊரான உதம்பூருக்கு வந்து விட்டார்.

இதற்கிடையே கற்பழிப்பு மூலம் அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே பிறந்த குழந்தை தற்போது பெரியவனாகி விட்டான். அவன் தனது தந்தை மற்றும் தாயை பற்றி விசாரிக்க தொடங்கினான். இதில் அந்தப் பெண் தான் தன்னுடைய தாய் என்பதை அறிந்து அவரை சந்தித்தான்.

பின்னர் தனது தந்தை யார் என அந்தப் பெண்ணிடமும், தன்னை வளர்த்து வந்தவர்களிடமும் தொடர்ந்து கேட்டு வருகிறான். எனவே தன்னை கற்பழித்த இருவரில், மகனுக்கு தந்தை யார் என்பதை அறிவதற்காக அந்த இருவர் மீதும் தற்போது அந்த பெண், போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால், அந்த புகாரை ஏற்க போலீஸார் மறுத்ததால், அவர் நீதிமன்றம் வழியாக சட்டப் போராட்டத்தைத் தொடங்கினார். அங்கு அவர் வழக்கு தாக்கல் செய்ததால், நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் போலீஸார், அந்தப் பெண்ணின் மகனுக்கு தந்தை யார் என்பதை அறிய நாகி ஹசன் மற்றும் குத்து ஆகியோருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் உதம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

**- ராஜ்**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share