கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்: ராகுல் காந்தி

Published On:

| By Balaji

பல்கலைக்கழக மற்றும் கல்லூரி தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்று யுஜிசிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்கள் தங்களது மாணவர்களுக்கான தேர்வை ரத்து செய்தன. அதே சமயத்தில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடத்துவது தொடர்பாக ஆய்வு நடத்திப் பரிந்துரைக்க யுஜிசி உயரதிகாரிகள் மட்டத்தில் குழு அமைக்கப்பட்டது.

இக்குழு பரிந்துரையின் பேரில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்த வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உயர்கல்வித் துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியது. இக்கடிதம் வெளியானதைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர்.

தற்போது மாணவர்களுக்கு ஆதரவாகக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் #speakupforstudents என்ற ஹேஷ்டாக் மூலம் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கல்லூரி தேர்வுகள் தொடர்பாக யுஜிசி குழப்பத்தை உருவாக்கி வருகிறது. வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வரும் காலத்தில் தேர்வுகளை நடத்துவது நியாயமற்றது. மாணவர்களின் குரலுக்கு யுஜிசி செவிசாய்க்க வேண்டும்.

கொரோனா வைரஸ் ஏராளமான மக்களைப் பாதித்துள்ள இந்த சூழலில் தேர்வுகள் நடத்தப்பட்டால் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஐஐடி போன்ற நிறுவனங்கள் தேர்வுகளை ரத்து செய்து மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது. அதுபோன்று, மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு முன்னதாக நடத்தப்பட்ட தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களைத் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

**-கவிபிரியா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share