மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு: மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு!

Published On:

| By Balaji

மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 9 பேர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக, அதிமுக, தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகம், மதிமுக சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவ படிப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய, மாநில அரசுகளும், மருத்துவ கழக அலுவலர்களும் முடிவெடுக்க வேண்டுமென 2020 ஜூலை 27ஆம் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் எத்தனை சதவிகிதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடாக வழங்குவது என்பது குறித்து மத்திய அரசு மூன்று மாதங்களில் அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், மாநிலங்களவை உறுப்பினரும், திமுக செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ் இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், 2020 செப்டம்பர் மாதம் மத்திய சுகாதாரத் துறைச் செயலர் அமைத்த குழுவில், தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலர் மற்றும் பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர் ஆகியோரை சேர்க்கவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை பதில் அளிக்கவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று(மார்ச் 1) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. மத்திய மாநில சுகாதாரத் துறை செயலாளர்கள் உள்ளிட்ட 9 பேரும் இந்த மனுவுக்குப் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

**வினிதா**

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share