உலகத்தையே கைக்குள் அடக்கும் பெருமை செல்போனுக்கு உண்டு. ஆனால் அவற்றால் எந்த அளவுக்கு நன்மைகள் உண்டோ அதே அளவுக்குத் தீமைகளும் உண்டு. காலையில் அலாரம் வைத்து எழுவது முதல், இரவு நண்பர்களுக்கு குட் நட் மெசேஜ் அனுப்புவது வரை நமது கண்கள் செல்போன்களைத்தான் அதிகளவு பார்க்கின்றன. இதனால் அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதைக் கூட கண்டு கொள்வதில்லை. ஒருவரை ஒருவர் எளிதில் தொடர்பு கொள்வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்கள் தற்போது ஸ்மார்ட்போன்களாக மாறிவிட்டன. வித விதமான விளையாட்டுகள், ஆன்லைன் பேமெண்ட், இருந்த இடத்திலேயே இருந்து உணவு ஆர்டர் செய்வது என உலக மக்களிடையே செல்போன் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. அத்தியாவசிய பொருள் என்பதையும் தாண்டி இதற்கு மக்கள் அடிமையாகிவிட்டனர் என்று தான் கூறவேண்டும்.
இதனைமெரிக்க புகைப்படக் கலைஞரான எரிக் பிக்கர்ஸ்கில் புகைப்படங்கள் உணரவைக்கின்றன. எரிக் பிக்கர்ஸ்கில், நியூயார்க்கில் உள்ள ஒரு சிற்றுண்டிச்சாலைக்கு ஒருமுறை சென்றுள்ளார். அப்போது, செல்போன்களில் மூழ்கிய ஒரு குடும்பத்தினர் , அருகருகில் இருந்து தங்களை ஒருவருக்கொருவர் எப்படித் தொடர்புகொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுள்ளார்.
பின்னர் அவர்கள் கையில் செல்போன் இல்லை என்றால் அது எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்து பார்த்துள்ளார்.
அதன்படி செல்போன் பயன்படுத்திக்கொண்டிருக்கும்போது அவர்களிடமிருந்து அதைப் வாங்கிக்கொண்டு, அந்தக் கணத்தைத் தன் கேமராவில் உறையச்செய்திருக்கிறார் எரிக் பிக்கர்ஸ்கில்.
ஒரு சின்ன கருவிக்கு மனிதர்கள் எவ்வாறு அடிமையாகியுள்ளனர் என்பதை அந்த புகைப்படங்கள் உணர்த்துகின்றன. அதாவது ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள கண்டுபிடிக்கப்பட்ட இந்த சாதனம் தங்களது அருகில் இருப்பவர்களிடம் கூட பேச விடாமல் மாற்றியிருக்கிறது என்பதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.
”கூவும் செல்போனின் நச்சரிப்பை அணைத்து, கொஞ்சம் சில்வண்டின் உச்சரிப்பைக் கேட்போம்” என்ற தமிழ் சினிமாவின் பாடல் வரிகளுக்கு ஏற்ப, செல்போனை தள்ளி வைத்து, நமது அருகில் இருப்பவர்களிடமும், இயற்கையோடும் முடிந்தவரை நேரத்தைச் செலவிடுவோம்.
�,”