fஎன்.ஆர்.சியை அனுமதிக்க மாட்டோம்: மம்தா

Published On:

| By Balaji

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) மேற்கொள்ளப்படும் என்று கூறியதையடுத்து, மேற்கு வங்கத்தில் (என்.ஆர்.சி) செயல்படுத்த தனது அரசாங்கம் அனுமதிக்காது என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கூறினார்.

நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத் தொடர், நவம்பர் 18ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. மூன்றாவது நாளான நேற்று (நவம்பர் 20), கேள்வி நேரத்தின்போது தேசிய பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது.

அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகும் இந்துக்கள், பவுத்தர்கள், ஜெயின் மதத்தினர், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சி மக்கள் அனைவரையும் அகதிகளாக மத்திய அரசு ஏற்கும். அவர்களுக்குக் குடியுரிமையும் வழங்கப்படும்.

தேசிய குடியுரிமை பதிவேடு முறை நாடு முழுவதும் செயல்படுத்தப்படும். யாரும் அவர்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அனைவரையும் தேசிய குடியுரிமையின் கீழ் கொண்டுவருவது சாதாரண செயல்முறைதான். நாடு முழுவதும் தேசிய குடியுரிமை பதிவேடு (என்.ஆர்.சி) செயல்படுத்தப்படும். மதத்தின் அடிப்படையில் யாரும் பாகுபாடு காட்டி நடத்தப்பட மாட்டார்கள்” எனக் கூறினார்.

இந்த நிலையில், நேற்று மாலை மேற்கு வங்கத்திலுள்ள முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சாகர்டிகியில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “யாராலும் எந்தவொரு நபரின் குடியுரிமையையும் பறிக்க முடியாது, யாரையும் அகதியாக மாற்ற முடியாது. ஆகஸ்ட் 31 அன்று அசாமில் வெளியிடப்பட்ட என்.ஆர்.சி இறுதிப் பட்டியலில் 14 லட்சம் இந்துக்கள் மற்றும் வங்காளிகளின் பெயர்கள் ஏன் விலக்கப்பட்டுள்ளன என்பதை பாஜக தெளிவுபடுத்த வேண்டும்” என அவர் சவால் விடுத்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலத்தில் கையெழுத்திடப்பட்ட அசாம் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக அசாமில் என்.ஆர்.சி இருப்பதாகக் கூறி, இதை இந்தியா முழுவதும் ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்றார்.

“வங்காளத்தில் என்.ஆர்.சி மேற்கொள்ளப்படும் என்று கூறி ஒரு சிலர் மாநிலத்தில் பிரச்சனையைத் தூண்ட முயற்சி செய்கின்றனர். வங்காளத்தில் என்.ஆர்.சியை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்பதை மிகத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்க யாரையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” எனக் கூறினார்.

மத அடிப்படையில் மாநிலத்தைப் பிளவுபடுத்த ஒரு சதி இருப்பதாகக் கூறிய மம்தா பானர்ஜி, வங்காளத்தை வகுப்புவாத அடிப்படையில் பிரிப்பது எளிது என்று யாராவது நினைத்தால், அந்த நபர் மூடர்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார் என்று கூறுவேன்.

அசாமில் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போன்ற தேசியக் குடியுரிமை பதிவேடு தயாரிக்கும் திட்டத்தை, மேற்கு வங்க மாநிலத்திலும் அமல்படுத்தி, அந்த மாநிலத்தில் உள்ள சட்டவிரோதக் குடியேறிகளை வெளியேற்றப் போவதாக அமித் ஷா கடந்த அக்டோபர் மாதம் கூறினார். அதனைத் தொடர்ந்து, நேற்று நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் என்.ஆர்.சி திட்டம் மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share