மதுக்கடைகளை அகற்றக்கோரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்!

public

மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் எதிரொலியாக மதுக்கடைகளை அகற்றக்கோரி பாகூர் தாலுகா அலுவலகத்தைப் பெண்கள் முற்றுகையிட்டதால் அந்தப் பகுதி பரபரப்பானது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பாகூரை அடுத்த சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கடந்த 29ஆம் தேதி தனியாக வயலில் வேலை செய்த 63 வயது மூதாட்டியை தாக்கி, வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதில் காயமடைந்த மூதாட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து பாகூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
சோரியாங்குப்பத்தில் உள்ள மது, சாராயக் கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்களால் அப்பகுதி பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருவதாகவும், பல இளைஞர்கள் வழிதவறி குடிப்பழக்கத்துக்கு ஆளாவதாகவும், இதற்கு காரணமான மதுக்கடைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறப் பெண்கள் பாகூர் தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாலியல் வன்முறைக்குள்ளாக்கியவரை உடனே கைது செய்ய வேண்டும். மூதாட்டிக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். எல்லைகளில் விவசாய நிலம் அருகே உள்ள மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும் என்று கோஷமிட்டனர்.
கோரிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கைகளில் ஏந்தி இருந்தனர். இந்தப் போராட்டத்தில் சோரியாங்குப்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர். இது சம்பந்தமான கோரிக்கை மனுவும் பாகூர் தாலுகா அலுவலகத்தில் கொடுக்கப்பட்டது. பெண்களின் முற்றுகை போராட்டத்தால் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது.

**-ராஜ்**

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.