தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் புகார் மனு ஒன்றை கொடுத்தனர்
பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் உள்ள காலனியைச் சேர்ந்த பெண்கள் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். பின்னர் அவர்கள் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்கள் காலனி பகுதியில் பெண்கள் கழிப்பிடம் கட்டப்பட்டது. தற்போது அது தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதனால், பெண்கள் திறந்தவெளியை கழிப்பிடமாகப் பயன்படுத்தும் நிலைமை உள்ளது. எங்கள் ஊரில் சட்ட விரோதமாக மது விற்பனை நடக்கிறது. டாஸ்மாக் கடை போன்றே தனிநபர் ஒருவர், பெட்டிக்கடையில் மதுபான பாட்டில்களை அடுக்கி வைத்து விற்பனை செய்கிறார்.
அந்த வழியாக செல்லும் பெண்களை மது போதையில் சிலர் கேலி செய்கின்றனர். இதனால், பெண்கள், மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம். எனவே, சட்டவிரோத மது விற்பனையை தடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பில் உள்ள கழிப்பிடத்தை மீட்டு மீண்டும் பெண்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும்” என்று அதில் கோரிக்கை வைத்தனர். பின்னர் போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து அவர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.
**-ராஜ்**
.