பெண் அரசியல்வாதிகளுக்கு ஆன்லைன் அச்சுறுத்தல்: அதிர்ச்சி ஆய்வு முடிவு!

Published On:

| By Balaji

இந்தியாவில் உள்ள பெண் அரசியல்வாதிகள் ட்விட்டரில் அதிர்ச்சியூட்டும் அளவிலான துஷ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர் என்று ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் பெண்கள் அரசியல்வாதிகள் எதிர்கொள்ளும் ஆன்லைன் அச்சுறுத்தல்கள் பற்றி 95 பெண் அரசியல்வாதிகளை மையமாக வைத்து ஆயிரக்கணக்கான ட்விட்டுகளை மதிப்பாய்வு செய்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவில் ஆன்லைனில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் பெண்கள் தங்கள் கருத்துக்காக மட்டுமல்லாமல், பாலினம், மதம், சாதி, திருமண நிலை மற்றும் பல அடையாளங்களுக்காக கேலி செய்யப்படுகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

சமூகத்தின் பொது இடங்களை விட சமூக தளங்கள் பெண்களுக்கு பாதுகாப்பானவை என்று ஒரு கருத்து இந்தியாவில் நிலவி வருகிறது. ஆனால் சுதந்திரமான வெளிப்பாட்டிற்கான பாதுகாப்பான இடம் என்று கூறப்படும் ட்விட்டரில் கூட பெண்கள், தலித்துகள் மற்றும் மத சிறுபான்மையினர் போன்றோர் அச்சுறுத்தப்படுகிறார்கள். இதனால் பல பெண்கள் இத்தளங்களில் இருந்து வெளியேறியிருக்கிறார்கள் என்றும் அந்த ஆய்வு முடிவு வெளிப்படுத்துகிறது.

“பல ஆண்டுகளாக சமூக ஊடக தளம் அரசியல் ஈடுபாடு, பிரச்சாரம் மற்றும் செயல்பாட்டிற்கான ஒரு இன்றியமையாத கருவியாக உருவெடுத்துள்ள நிலையில், பெண்கள் தொடர்ந்து இங்கே துஷ்பிரயோகத்திற்கும் ஆளாகிறார்கள். இது அவர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்துகிறது” என்று ஆம்னஸ்டி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அவினாஷ் குமார் இந்த ஆய்வு பற்றிக் குறிப்பிடுகிறார்.

2019 மார்ச்-மே மாதத்தின் மூன்று மாத காலப்பகுதியில் 95 இந்திய பெண் அரசியல்வாதிகளைக் குறிப்பிடும் 1,14,716 ட்வீட்களை இந்த ஆய்வு மதிப்பிட்டது. ஆய்வில் 95 பெண் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ள ட்வீட்களில் 13.8% பதிவுகள் மோசமான எதிர்வினைகளை பெற்றுக் கொடுத்துள்ளன. எல்லா பெண்களுக்கும் ஒவ்வொரு நாளும் 10,000 க்கும் மேற்பட்ட சிக்கலான அல்லது தவறான ட்வீட்களை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக முஸ்லீம் பெண் அரசியல்வாதிகள் மற்ற மதங்களைச் சேர்ந்த பெண் அரசியல்வாதிகளை விட 94.1% அதிகமான இன அல்லது மத அவதூறுகளைப் பெற்றனர் என்றும் அது கண்டறிந்துள்ளது. ஆளும் பாரதிய ஜனதாவைத் தவிர மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பெண் அரசியல்வாதிகளும் அதிக துஷ்பிரயோகங்களை அனுபவித்தனர் என்றும் இந்த ஆய்வில் அறியப்பட்டுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share