என் ஐந்தரை வயது மகனை மீட்டுத்தர வேண்டும் என்று தஞ்சை ஆட்சியரிடம் இளம்பெண் கோரிக்கை மனு அளித்தது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள புதுப்பட்டினம் கரையூர் தெருவைச் சேர்ந்தவர் சீதாராமன். இவருடைய மனைவி 25 வயது கீதா. இவர், தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் ஒரு மனு அளித்தார்.
அதில், “எனது சொந்த ஊர் வேலூர் மாவட்டம். எனது பெற்றோர் இறந்து விட்டதால் சேலத்தில் உள்ள எனது அத்தை வீட்டில் வசித்து வந்தேன். பின்னர் குடும்ப சூழல் காரணமாக கோவையில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். அப்போது அங்கு வேலை பார்த்த சீத்தாராமனை 2015ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டேன்.
அவருடைய சொந்த ஊரான கரையூரில் வசித்து வந்தோம். எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனது கணவர் என்னை தனியாக விட்டுவிட்டு வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அங்கு அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். எனவே நான் சேலம் செல்ல முயன்றபோது, எனது மாமனாரும் மாமியாரும் எனது மகனை பிடுங்கி வைத்துக்கொண்டனர்.
அவனுக்கு தற்போது ஐந்தரை வயது ஆகிறது. எனது மகனை மீட்டுத்தரக்கோரி பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மகனை மீட்டுத்தர வேண்டும்” என்று அந்த மனுவில் கோரியுள்ளார்.
**-ராஜ்-**
.