நீட் தேர்வில் மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்தது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் தேர்விலும் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தேர்வில் காப்பி அடிக்க உதவியதாகச் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் தேர்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை புற நகர் பகுதியில் மாதா மருத்துவக் கல்லூரி மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் வெவ்வேறு தேதிகளில் இந்த இரு கல்லூரியிலும் செமஸ்டர் தேர்வு நடந்துள்ளது. இந்த தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தது தெரியவந்துள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 25 பேர், மூன்றாமாண்டு மாணவர் ஒருவர், இறுதியாண்டு மாணவர்கள் 15 பேர் என 41 பேர் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர்.
தேர்வறைகளில் முறைகேடு நடந்ததாக எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்துக்கு வந்த புகாரை அடுத்து இந்த கல்லூரியில் விசாரணை நடத்தியதில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. தேர்வு ஒழுங்கு நடவடிக்கைக் குழு இரு கல்லூரியிலும் தேர்வறைகளிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்திருக்கிறது.
அதன்மூலம் தேர்வறைகளில் மாணவர்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப அங்கும் இங்கும் செல்வதும், புத்தகங்களையும், விடைத்தாள்களையும் பகிர்ந்துகொண்டு தேர்வு எழுதியதும் தெரியவந்துள்ளது. மாணவர்கள் தேர்வு அறையை விட்டு வெளியே செல்வதும், மீண்டும் உள்ளே வருவதும் பதிவாகியுள்ளது.
தேர்வில் முறைகேடு நடந்திருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இரு கல்லூரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. தேர்வில் காப்பி அடித்த 41 மாணவர்களும் அதே தேர்வை மீண்டும் பிப்ரவரியில் எழுத வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
மாதா மருத்துவக் கல்லூரி தனது வளாகத்தில் 3 ஆண்டுகள் தேர்வுகள் நடத்த எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகம் இன்று (அக்டோபர் 19) தடைவிதித்துள்ளது. இதுபோன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியின் தேர்வு மைய அங்கீகாரம் 2 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வறை கண்காணிப்பாளரின் உதவியுடன் இந்த முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.
�,